சேலத்தில் அதிகாரிகள் சோதனை: 41½ டன் கலப்பட வெல்லம் பறிமுதல்
சேலத்தில் உள்ள வெல்ல மண்டியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 41½ டன் கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்,
சேலம் செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோவில் அருகே வெல்லம் ஏல மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு சேலம், ஓமலூர், காடையாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வெல்லம் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வெல்லத்தை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.
இந்தநிலையில் வெல்லத்தில் சர்க்கரை மற்றும் ரசாயனம் கலப்படம் செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை வெல்ல மண்டிக்கு சென்று சோதனை நடத்தினர்.
வெல்ல மண்டியில், விற்பனைக்காக சேலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 42 வாகனங்களில் வெல்லம் கொண்டு வரப்பட்டு இருந்தது. இந்த வெல்லத்தில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா? என்பன உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 23 வாகனங்களில் இருந்த வெல்லத்தில் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், வெல்லத்தில் கலப்படம் செய்து விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் சோதனை நடத்தினோம். அப்போது வெல்லத்தில் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 41½ டன் வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து வெல்லத்தின் மாதிரி எடுக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து அறிக்கை வந்த பின்னர் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.
அதிகாரிகளின் இந்த சோதனையால் வெல்ல மண்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story