குடிமனைப்பட்டா வழங்கக்கோரி, விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திருத்துறைப்பூண்டியில் நடந்தது
குடிமனைப்பட்டா வழங்கக்கோரி திருத்துறைப்பூண்டியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
கோவில் மனை, தனியாருக்கு சொந்தமான மனை, அரசு பயன்பாட்டிற்கு இல்லாத மனைகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் அனைவருக்கும் குடிமனைப்பட்டா வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். சிறப்பு திட்டத்தின்கீழ் அனைத்து தொகுப்பு வீடுகளையும் புதிதாக கட்டித்தர வேண்டும். 60 வயது முதிர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2018-19-ம் ஆண்டுக்காக பயிர் காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஜவஹர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், நகர தலைவர் பக்கிரிசாமி, நகர செயலாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாவட்ட துணை செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் முருகேசன், நகர துணை செயலாளர் சுந்தர், ஒன்றிய துணை செயலாளர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக பட்டுக்கோட்டை சாலை அம்பேத்கர் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாசில்தார் அலுவலகம் முன்பு வந்தடைந்தனர்.
திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அரசாணை 318-ஐ நிறைவேற்றக்கோரியும், கோவில் இடங்களில் குடியிருப்போருக்கும், 18 வகையான புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கும் பட்டா வழங்கக்கோரியும் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது.
போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது போராட்டக்குழுவினர் அளித்த கோரிக்கை மனுவை தாசில்தார் மகேஷ்குமார் பெற்றுக் கொண்டார். முன்னதாக திருத்துறைப்பூண்டி அம்பேத்கர் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.
அதேபோல மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கூத்தாநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மன்னார்குடி ஒன்றிய செயலாளர் திருஞானம் தலைமை தாங்கினார். கூத்தாநல்லூர் நகர செயலாளர் நூர்முகமது முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாவட்டக்குழு உறுப்பினர் தம்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் அவர்கள் மனுவை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story