சிங்கம்புணரி பகுதியில், வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மனு


சிங்கம்புணரி பகுதியில், வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மனு
x
தினத்தந்தி 26 Nov 2019 10:15 PM GMT (Updated: 26 Nov 2019 9:32 PM GMT)

சிங்கம்புணரி பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் ஆயிரக்கணக்கானோர் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக குடியிருந்து வருகிறார்கள்.

பட்டா இல்லாமல் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க அரசு முடிவு எடுத்ததை தொடர்ந்து சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் எஸ்.புதூர் மற்றும் சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிங்கம்புணரி தாலுகா செயலாளர் காந்திமதி தலைமையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் செல்வராணியிடம் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனுக்களை அளித்தனர். அப்போது தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுதா உடனிருந்தார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட பொறுப்பாளர் சாந்தி கூறுகையில்:-

அரசுக்கு சொந்தமான நிலங்களில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. மேலும் அவர்களுக்கு ஆக்கிரமிப்பு இடிப்பு என்ற பெயரில் பயமுறுத்தும் வகையில் நெருக்கடி கொடுப்பது போன்ற சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை சரிசெய்ய அரசு நிலைமைக்கு தகுந்தார்போல் வகை மாற்றம் செய்ய வேண்டும்.

அவ்வாறு மாற்றம் செய்யப்பட முடியாத சூழ்நிலையில் இடமாற்றம் கொடுத்து வீடுகள் கட்டி கொடுக்கும் நிலையை அரசு உறுவாக்க வேண்டும். அதனடிப்படையில் அரசு நிலங்களில் குடியிருக்கும் 100-க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்கக்கோரி மனு அளித்துள்ளனர். இதனை அரசு கருத்தில் கொண்டு அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Next Story