தூத்துக்குடி, புதுக்கோட்டையில், 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு


தூத்துக்குடி, புதுக்கோட்டையில், 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 27 Nov 2019 3:30 AM IST (Updated: 27 Nov 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, புதுக்கோட்டையில் 2 வீடுகளில் நகை, பணத்தை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி கே.டி.சி. நகரை சேர்ந்தவர் ராமகிரு‌‌ஷ்ணன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரேமலதா (வயது 31). இவர் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். பிரேமலதா வழக்கம் போல் கடந்த 17-ந் தேதி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 சுடிதார்கள் மற்றும் ரூ.350-யை மர்மநபர் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த விலை உயர்ந்த டி.வி. உள்ளிட்ட பொருட்கள் அப்படியே இருந்தது. இந்த சம்பவம் குறித்து பிரேமலதா சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கிருபஸ் நகரை சேர்ந்தவர் குருசாமி (53). நிதி நிறுவன மேலாளர். இவருடைய மகன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக குருசாமியும், அவருடைய மனைவியும் பெங்களூருக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலி, வெள்ளி குத்துவிளக்கு மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த குருசாமி, புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story