நீர்மட்டம் 141 அடியாக உயர்வு: நிரம்பும் தருவாயில் பாபநாசம் அணை
நீர்மட்டம் 141 அடியாக உயர்ந்து உள்ளதால் பாபநாசம் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.
விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் 140 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 1 அடி உயர்ந்து 141 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,712 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே, மொத்தம் 143 அடி உயரம் கொண்ட இந்த அணை விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது. அணையில் இருந்து பாதுகாப்பு கருதி 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 153.12 அடியாக உயர்ந்து உள்ளது. இந்த அணையும் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது.
இதுதவிர மணிமுத்தாறு அணை நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று இந்த அணையின் நீர்மட்டம் 75.75 அடியாக உயர்ந்திருந்தது. அணைக்கு வினாடிக்கு 727 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்துக்கு 35 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. அவ்வப்போது லேசான மழை பெய்தது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-
அம்பை -2, ஆய்குடி -2, சேரன்மாதேவி -2, நாங்குநேரி -2, பாளையங்கோட்டை -3, சங்கரன்கோவில் -1, சிவகிரி -1, நெல்லை -4.
அணை பகுதிகளில் பாபநாசம் -13, சேர்வலாறு -13, மணிமுத்தாறு -5, ராமநதி -2, கருப்பாநதி -1, கொடுமுடியாறு -10.
Related Tags :
Next Story