ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 170 பேர் கைது


ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 170 பேர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2019 5:00 AM IST (Updated: 27 Nov 2019 4:22 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 170 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு,

சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களின் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று காலை சத்துணவு ஊழியர்கள் பலர் திரண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

அதன்பின்னர் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக சத்துணவு ஊழியர்கள் கோஷமிட்டபடி தாலுகா அலுவலகம் முன்பு உள்ள கச்சேரிரோட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்படுவதாக போலீசார் கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர். இதில் 135 பெண்கள் உள்பட மொத்தம் 170 பேர் கைது செய்யப்பட்டு, ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


Next Story