விழுப்புரம் மாவட்டத்தில் பல்கலைக்கழகம் கொண்டு வர வேண்டும்; அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் பல்கலைக்கழகம் கொண்டு வர வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் நடந்த அரசு சட்டக்கல்லூரி மற்றும் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி திறப்பு விழாவிற்கு தலைமை தாங்கிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-
விழுப்புரம் மாவட்டம் வடமாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டம். இங்குள்ள மாணவர்கள் சட்டம் படிக்க வேண்டுமானால் சென்னைக்கோ அல்லது வேலூருக்கோ செல்ல வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி இன்றைக்கு விழுப்புரத்தில் அரசு சட்டக்கல்லூரியை ஏற்படுத்திக்கொடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும், எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 6 சட்டக்கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக உள்ள விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கல்வி மேம்பட சட்டக்கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது அ.தி.மு.க. அரசு.
அ.தி.மு.க. அரசு, எந்தவொரு திட்டத்தை அறிவித்தாலும் உடனடியாக அந்த திட்டத்தை நிறைவேற்ற தேவையான நிதியை ஒதுக்கி உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. அந்த வகையில்தான் இந்தியாவிலேயே ஒரு சிறந்த சட்டக்கல்லூரியாக ரூ.70½ கோடியில் விழுப்புரத்தில் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சட்டம் பயிலும் மாணவர்கள் சிறந்த சட்ட வல்லுனர்களாக திகழ்ந்து சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியில் விழுப்புரம் நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான திட்டங்களை இன்றைக்கு முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அதுபோல் பெண்கள் உயர்கல்வி பெற முடியாத குறையை போக்கி இன்றைக்கு விழுப்புரம் நகரில் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அதுபோல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிக்கான பணிகளும் நடந்து வருகிறது. மொத்தத்தில் விழுப்புரம் நகரம் ஒரு கல்வி நகரமாக உருவாகி இருக்கிறது. இந்த நேரத்தில் முதல்-அமைச்சரிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். உங்கள் காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை அறிவித்து அதனை நீங்களே தொடங்கி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story