மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சராகும் ஆசை நிறைவேறாது ; ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
மக்கள், அ.தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சராகும் ஆசை எந்த காலத்திலும் நிறைவேறாது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவுக்கு தலைமை தாங்கிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தமிழகத்தில் ஏற்கனவே இருந்த 32 மாவட்டங்களில் 12 புதிய மாவட்டங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 புதிய மாவட்டங்களை அறிவித்தார். இதில் 22-ந் தேதி தென்காசி மாவட்டமும், இன்று கள்ளக்குறிச்சி மாவட்டமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 மாவட்டங்கள் வருகிற 28, 29-ந்தேதிகளில் தொடங்கி வைக்கப்படும்.
இந்த விழாவிற்கு பிறகு மொத்தமாக இருக்கும் 37 மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக அமையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படி எவ்வளவு தான் நல்லது செய்தாலும், சிறப்பான திட்டங்களை நிறைவேற்றினாலும் எதிர்க்கட்சியினர் அதை பாராட்டாமல், குறைசொல்வதையே வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.
அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அரசு மீது தினமும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதில், மிகவும் திறமை வாய்ந்தவராக இருக்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் திட்டங்களை அறிவிப்பார்கள், அதற்கு பாராட்டு கூட்டங்களை நடத்துவார்கள். அரசாணை எங்கே என்று சட்டமன்றத்தில் கேட்டால் அரசாணையும் போட்டு தருவார்கள். ஆனால் திட்டங்களை செயல்படுத்துவதே இல்லை. இதை பார்க்கும்போது திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. அது என்னவென்றால் வரும்... ஆனா வராது... அதை போலதான் தி.மு.க. ஆட்சியில் வரும், ஆனால் எந்த காலத்திலும் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வராது.
உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் என்று இந்த அரசு முடிவு எடுத்துள்ளதை தாங்கிக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் குறை சொல்கிறார்கள். உள்ளாட்சி தேர்தல் அறிவித்தபோது, அவர்கள் தான் வழக்கு தொடர்ந்தார்கள். தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.
அறிவிப்பு வர ஓரிரு நாட்கள் தான் இருக்கிறது. தி.மு.க.வும் மறைமுக தேர்தலை நடத்தினார்கள். மு.க.ஸ்டாலினுக்கு ஒரே ஒரு ஆசை. இந்த ஆட்சியை எப்படியாவது குறை கூறி ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அது எந்த காலத்திலும் நடக்காது. ஏன் நடக்காது என்றால், சமீபத்தில் நடந்த 2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் நாம் தான் மாபெரும் வெற்றி பெற்றோம். இதன் மூலம் தமிழக மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது.
இந்த வெற்றி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும், அடுத்து நடக்க இருக்கிற சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். இதை பொறுக்க முடியாமல், அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எந்த காலத்திலும் அவர் முதல்-அமைச்சராக வர முடியாது. அவரது ஆசை நிறைவேறாது. ஏன் வர முடியாது என்றால் மக்கள், அ.தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள். நாம் மக்கள் பக்கம் இருக்கிறோம். அ.தி.மு.க. அரசுக்கு முழு ஆதரவை தருகிறார்கள். 2016-ல் ஜெயலலிதா போட்ட விதை, இப்போது வளர்ந்து மரமாகி, பூவாகி, காயாகி, கனியாகி பலன் கொடுத்து வருகிறது. அம்மாவின் திட்டங்களை அப்படியே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.
மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வரும். அவர் என்ன நினைத்தாலும் அ.தி.மு.க.வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
Related Tags :
Next Story