அரிசி ரே‌‌ஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


அரிசி ரே‌‌ஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Nov 2019 5:03 AM IST (Updated: 27 Nov 2019 5:03 AM IST)
t-max-icont-min-icon

அரிசி ரே‌‌ஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

கள்ளக்குறிச்சி, 

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் தொடக்க விழா கள்ளக்குறிச்சியில் நேற்று காலை நடைபெற்றது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் செல்கின்ற இடமெல்லாம், பல பேர் என்னிடத்தில் கோரிக்கையாக வைத்தார்கள். தைப்பொங்கல் வருகிறது. அந்த நாளில், எங்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று பொதுமக்கள் என்னிடத்தில் கேள்வி எழுப்பினார்கள். நான் சொன்னேன், நிச்சயமாக நீங்கள் வைக்கும் கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருக்கிறது. ஒரு விழாவில் நல்ல அறிவிப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று சொன்னேன். அதன்படி புதிய அறிவிப்பை இந்த விழாவில் நான் அறிவிக்கிறேன்.

தைப்பொங்கல் திருவிழா தமிழர்களின் தனிச்சிறப்பு மிக்க திருவிழா. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள், தமிழக மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். தமிழர் மரபையும், பாரம்பரியத்தையும் அடையாளப்படுத்தும் இவ்விழா தமிழ்நாட்டில் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு. எனவே தான் சென்ற ஆண்டு வறட்சியின் பாதிப்பு, ஏழைமக்களை பாதிக்காத வண்ணம் அரிசி ரே‌‌ஷன் கார்டு வைத்துள்ள அனைத்து குடும்பத்தினரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அம்மாவின் அரசு நடைமுறைப் படுத்தியது.

இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. விவசாயிகள் தங்களிடம் உள்ள பணத்தை இடுபொருட்களுக்கும், பிற பணிகளுக்கும் செலவழித்து விட்ட நிலையில், அவர்களும் சிரமமின்றி பொங்கல் திருவிழாவை இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாட வேண்டும். இதற்காக சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரிசி ரே‌‌ஷன் கார்டு வைத்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும்.

மேலும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இது உங்கள் அரசு, மக்களுடைய அரசு. தேவைகளை அறிந்து செயல்படுகிற அரசு அம்மாவின் அரசு.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story