தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயம்; எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயம்; எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Nov 2019 11:42 PM GMT (Updated: 26 Nov 2019 11:42 PM GMT)

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் அந்த பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியது.

கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்திலும் குரல் எழுப்பப்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தோற்றுவித்து கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் 34-வது மாவட்டமாக உதயமானது கள்ளக் குறிச்சி.

பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான எல்லைகள் வரையறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கு 6 தாலுகாக்களை ஒதுக்கீடு செய்து கடந்த 13-ந்தேதியன்று அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமானது கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய 2 வருவாய் கோட்டங்களும், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் புதிய தாலுகாவான கல்வராயன்மலை ஆகிய 6 தாலுகாக்கள் மற்றும் 558 கிராமங்களை உள்ளடக்கி உதயமாகி உள்ளது.

அதேபோல் சங்கராபுரம், ரி‌ஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளும், சின்னசேலம், திருக்கோவிலூர், மணலூர்பேட்டை, தியாகதுருகம், வடக்கநந்தல், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் ஆகிய 7 பேரூராட்சிகளும், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ரி‌ஷிவந்தியம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களும் இடம்பெற்றுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம் 3,520 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் தொடக்க விழா கள்ளக்குறிச்சியில் நேற்று காலை 11 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவுக்காக கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி அருகில் உள்ள சாமியார் மடத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டிருந்தது.

விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யமிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றினார்.

விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஏற்கனவே முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

திண்டிவனம் அருகே பிரமாண்டமான ஒரு உணவு பூங்கா உருவாக்க இருக்கிறோம். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களை இந்த உணவு பூங்காவில் நியாயமான விலையில் விற்பனை செய்யலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதேபோல் 10 மாவட்டங்களில் இந்த மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் பயிர் கடனாக ரூ.10 ஆயிரம் கோடியை வழங்கி உள்ளோம். விதை, உரங்கள் மானியாக வழங்குகிறோம்.

ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்ட எல்லையில் 1,866 ஏக்கரில் அமைய உள்ளது. இதன் உள்கட்டமைப்பு வசதிக்காக மட்டும் ரூ.1,000 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது. இதற்காக முதல் கட்டமாக ரூ.396 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மக்களுக்காக புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களையெல்லாம் கோடிட்டு, புள்ளி விவரத்தோடு, நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், செல்லும் இடமெல்லாம் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இந்த ஆட்சியில் மக்கள் எந்த நன்மையும் பெறவில்லை என்று தவறான, பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறார்.

ஆனால் நாங்கள் பொய் சொல்லவில்லை. பொய் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் உண்மையை பேசுகிறோம். செயல்படுத்துகிறோம். எது தேவை என்று அறிந்து செயல்படுகிற அரசாக இருக்கிறோம். அதை நடைமுறையில் சாதித்தும் காட்டி வருகிறோம். ஜெயலலிதா இருந்தபோதும் சரி, அவர் மறைந்த பிறகும் சரி திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் மக்களுக்காக எடுத்துச்செல்கிறோம். எங்களது அரசு எந்த அளவுக்கு திறனுள்ள அரசு என்பதை நாங்கள் பட்டியலிட்டு சொல்லி வருகிறோம்.

உள்ளாட்சி தேர்தல் இன்றைக்கு நடைபெறுமா?, நடைபெறாதா? என்று ஒரு ஐயத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிக்கொண்டே இருக்கிறார். நிச்சயமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். அதற்கான ஆயத்தப்பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து கொண்டே இருக்கிறது. 1996-ம் ஆண்டு வரை மறைமுக தேர்தல் தான் தமிழ்நாட்டில் நடந்தது. அதன்பிறகு தி.மு.க. ஆட்சி வந்தபோது, மு.க.ஸ்டாலின் முதன் முதலாக நேரடி தேர்தலை சந்தித்தார். அதை மறந்து விட்டு பேசுகிறார். அதன்பிறகு மறைமுக தேர்தல் கொண்டு வந்ததும் அவரே. நீங்கள் தான் அறிவித்தீர்கள். மறைமுக தேர்தலுக்கு சட்டமன்றத்திலும் விளக்கம் அளித்தீர்கள். ஆனால் தற்போது ஏன் மறைமுக தேர்தலை சந்திக்க தயங்குகிறீர்கள். மக்கள் ஓட்டு போட்ட பிறகு தான் கவுன்சிலர்கள் வருகிறார்கள். கவுன்சிலர்கள் தான் தலைவரை தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் என்ன தவறு உள்ளது. நீங்கள் கொண்டு வந்தால் சரி, நாங்கள் கொண்டு வந்தால் தவறா?. தவறு என்றால் நீங்கள் 2006-ம் ஆண்டில் கொண்டு வந்ததும் தவறா?, தவறான திட்டத்தை தான் நடைமுறைப்படுத்தினீர்களா? அது சரி என்றால், இதுவும் சரி தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எம்.சி.சம்பத், வேலுமணி, அன்பழகன், காமராஜ், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சரோஜா, ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர் உள்பட பல்வேறு துறை அமைச்சர்கள், விழுப்புரம் தெற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு எம்.எல்.ஏ., பிரபு எம்.எல்.ஏ., தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவர் ராஜசேகர், முன்னாள் அமைச்சர் மோகன் மற்றும் அரசு அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர். முடிவில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண் குராலா நன்றி கூறினார்.

Next Story