உளுந்து சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.7 ஆயிரத்து 500 மானியம் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்


உளுந்து சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.7 ஆயிரத்து 500 மானியம் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
x
தினத்தந்தி 27 Nov 2019 11:00 PM GMT (Updated: 27 Nov 2019 2:59 PM GMT)

உளுந்து சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.7 ஆயிரத்து 500 மானியம் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டு பயறு உற்பத்தியை பெருக்க ரூ.41 லட்சத்து 2 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், உளுந்து செயல்விளக்கம் 200 எக்டரில் அமைக்க ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உளுந்து சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ.7 ஆயிரத்து 500 வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. ஒரு எக்டருக்கு தேவையான 20 கிலோ விதை (10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட புதிய ரகம்), 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, உயிர் உரம் ஒரு லிட்டர், பயறு நுண்சத்து 5 கிலோ பூசா ஹைட்ரோ ஜெல் 100 கிராம், டி.ஏ.பி. 25 கிலோ முதலிய இடுபொருட்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் இத்திட்டத்தில் விதைக்கும் கருவி வாடகை, பயிர் பாதுகாப்பு மருந்துகள், டி.ஏ.பி. தெளிப்பு, கூலி போன்ற இனங்களில் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். வயல் விழா கொண்டாடுதல், விளம்பரம் முதலியவற்றிற்கும் நிதி ஒதுக்கீடு உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட பழைய ரகங்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.25 மானியம் வழங்கப்படுகிறது. வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும். 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட புதிய ரகங்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.50 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. விதை வினியோக மானியமாக ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க

இது தவிர பயறு நுண்சத்து 50 சதவீதம் மானியத்தில் வழங்க ரூ.50 ஆயிரமும், திரவ நுண்ணுயிர் உரங்கள் வழங்க ரூ.3 லட்சமும், ஜிப்சம் மானியத்தில் வழங்க ரூ.75 ஆயிரமும், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மானியத்தில் வழங்க ரூ.1 லட்சமும், 60 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.28 ஆயிரம், வரப்பில் துவரை அல்லது உளுந்து சாகுபடி செய்ய ரூ.7 ஆயிரத்து 500-ம், 50 தார்பாய்கள் மானியத்தில் வழங்க ரூ.75 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தில் ரோட்டவேட்டர் சிறு, குறு, ஆதிதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு ரூ.42 ஆயிரம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 400 மானியத்திலும் 15 எண்கள் வழங்க ரூ.5 லட்சத்து 6 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ரூ.3 ஆயிரம் மானியத்தில் எட்டு விசை தெளிப்பான்களும், 14 யூனிட்டுகள் ரூ.15 ஆயிரம் வீதம் மானியத்தில் வழங்க ரூ.2 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story