திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை திருட்டு
திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 30 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரத்தை திருடிவிட்டு தப்பியுள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை வேங்கிக்கால் செல்வாநகரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 57). இவர் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மணிமேகலை, கலசபாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
அவ்வப்போது சந்திரன் திருவண்ணாமலைக்கு வந்து விட்டு மதுரைக்கு திரும்புவார். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக திருவண்ணாமலைக்கு வந்த சந்திரன், சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அவருடன் மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை இவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்தனர். அவர்கள் அதுகுறித்து சென்னையில் சிகிச்சை பெற்று வரும் சந்திரனை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டினுள் சென்று பார்வையிட்டனர். பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.
போலீசாரின் முதற் கட்ட விசாரணையில், நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த பணம்,நகைகளை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. போலீசார், சந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டு திருட்டு சம்பவம் குறித்து தெரிவித்தனர். வீட்டில் சுமார் 30 பவுன் நகை, ரூ.65 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் சந்திரனின் குடும்பத்தினர் வந்தபின்னரே திருட்டுப் போன பொருட்களின் விவரம் தெரியவரும்.
இந்த நிலையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உடைக்கப்பட்ட பூட்டு மற்றும் பீரோவில் பதிவான கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story