சாணார்பட்டி பகுதியில், தேங்காய் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
சாணார்பட்டி பகுதியில், தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோபால்பட்டி,
சாணார்பட்டி, கோபால்பட்டி, வேம்பார்பட்டி, தவசிமடை, செங்குறிச்சி, அஞ்சுகுளிப்பட்டி, ராஜக்காபட்டி, கன்னியாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் உள்ளன. இங்கிருந்து குஜராத், மத்தியபிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேங்காய் லாரிகளில் தினமும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
வடமாநிலங்களில் பண்டிகை, கும்பமேளா உள்ளிட்ட திருவிழா நடைபெறும் நாட்களில் தேங்காய் விற்பனை சூடுபிடிக்கும். விலையும் ஏறுமுகமாக இருக்கும். அதன்படி தீபாவளி பண்டிகையையொட்டி தேங்காய் விற்பனை அதிகமாக இருந்தது. அதன்பிறகு கடந்த ஒரு மாதமாக, வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. விலையும் வீழ்ச்சி அடைந்து வருகிறது.
கடந்த மாதம் ரூ.10-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட தேங்காயை, தற்போது ரூ.7-க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இன்னும் 2 மாதங்களுக்கு தேங்காய் விலை இறங்குமுகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென்னை மரங்களை பொறுத்தவரையில் ஆண்டு முழுவதும் பராமரிக்க வேண்டும். குறிப்பாக உரம், சாணம், ஆட்டுக்கிடை, வரப்பு அமைத்தல், தண்ணீர் பாய்ச்சுதல், தேங்காய் வெட்டுக்கூலி, காவலாளி ஆகியவற்றுக்காக அதிக அளவில் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆண்டுதோறும் செலவுத்தொகை மட்டும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தேங்காய் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர். ஒரு தேங்காய் ரூ.15-க்கு விற்கப்பட்டால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும். இல்லையெனில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே தேங்காய்க்கு கட்டுப்படியான விலை கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் தேங்காய்களில் இருந்து பல்வேறு மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் மையத்தை நத்தம் பகுதியில் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story