20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 130 பேர் கைது
விழுப்புரத்தில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் வீமன், ராஜாராமன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் மணிக்கண்ணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் தேசிங்கு கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநில தலைவர் சுந்தராம்பாள், போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதில் மாநில பொருளாளர் பேயத்தேவன், மாநில துணைத்தலைவர் சாவித்திரி, மாவட்ட பொருளாளர் ஜெயந்தி, இணை செயலாளர் ஜானகிதேவி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் அபராஜிதன், விஜயா உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கனகேசன், ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், பிரகாஷ், பாஸ்கரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 130 பேரை கைது செய்து பஸ்களில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story