ஈரோட்டில் ஒரு வாரமாக குறையாத வெங்காயத்தின் விலை


ஈரோட்டில் ஒரு வாரமாக குறையாத வெங்காயத்தின் விலை
x
தினத்தந்தி 28 Nov 2019 3:45 AM IST (Updated: 27 Nov 2019 11:56 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ஒரு வாரமாக வெங்காயத்தின் விலை குறையாமல் உள்ளது. ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோடு, 

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோல் ஈரோட்டிலும் வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஒரு வாரமாக 100 ரூபாயை கடந்து வெங்காயம் விற்பனையாகிறது.

வெங்காய விலை உயர்வை கிண்டல் அடித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக தங்க நகைகளை பாதுகாப்பதைபோல பீரோவுக்குள் வெங்காயத்தை பாதுகாப்பாக வைக்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது. வெங்காயத்தை நறுக்கும்போது கண்ணீர் வருகிறது என்றால், தற்போது விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது என்று குடும்ப பெண்கள் புலம்புகின்றனர்.

ஈரோடு நேதாஜி காய்கறி தினசரி மார்க்கெட்டிலும் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உயர்ந்தது. அதன்பின்னர் விலை குறையவே இல்லை. இதனால் பொதுமக்களும் தேவைக்கு மட்டுமே வெங்காயத்தை வாங்கி செல்கிறார்கள்.

இதுகுறித்து வெங்காய வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

ஈரோட்டிற்கு புனே, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து ஏற்படுகிறது. இதில் புனேயில் இருந்து வரும் வெங்காயம் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே கர்நாடகாவில் இருந்து வரும் சிறிய அளவிலான வெங்காயம் ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனையாகிறது. இதேபோல் சின்ன வெங்காயத்தின் விலையும் தரத்தை பொறுத்து ரூ.100-ல் இருந்து ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த சின்ன வெங்காயம் தாளவாடி, ஆசனூர், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஈரோட்டுக்கு வருகிறது. வரத்து மிகவும் குறைவாக இருப்பதால் வெங்காயத்தின் விலை அதிகமாக உள்ளது. வரத்து அதிகரிக்க தொடங்கினால் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story