சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் அமைக்க எதிர்ப்பு: குலசேகரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் அமைக்க எதிர்ப்பு: குலசேகரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2019 4:30 AM IST (Updated: 28 Nov 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குலசேகரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டார்.

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள 17 வருவாய் கிராமங்களில், சுமார் 3 கி.மீ. தூரம் வரையுள்ள விவசாயிகளின் விளை நிலங்களையும், வீடுகளையும் உள்ளடக்கி சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இம்மண்டலத்தை வன எல்லைக்குள்ளேயே அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தும்பகோடு கிராம அலுவலகம் முன்பு குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சங்க தலைவர் நெல்்சன் தலைமை வகித்தார். செயலாளர் சி.பாலச்சந்திரன் நாயர் வரவேற்றார்.

பி.ஆர்.பாண்டியன்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் மக்கள் செய்யும் நெல், வாழை, மலர் உள்ளிட்ட விவசாய பொருட்கள் மூலம் பிற மாவட்ட மற்றும் மாநில மக்கள் பயனடைந்து வருகின்றனர். குமரி மாவட்ட விவசாயத்தை அழிக்கும் வகையில் வனத்துறையினர் பிற இடங்களிலிருந்து குரங்குகளையும், பன்றிகளையும், விஷ பாம்புகளையும் கொண்டு இறக்கி வருகின்றனர்.

வனத்துறையினரின் கெடுபிடிகள் காரணமாக பேச்சிப்பாறை அணையைக் கூட தூர்வாரி ஆழப்படுத்த முடியாத நிலை உள்ளது. அரசுகள்தான் காடுகளை அழித்து நான்கு வழிச்சாலைகள் அமைக்கின்றன. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழிக்கும் திட்டங்களை விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது.

சாலை மறியல்

ஒட்டு மொத்த தமிழகமும் குமரி மாவட்ட விவசாயிகளின் பின்னால் நிற்கும். விவசாயிகளுக்காக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் வகையில் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம். மேலும் நாடாளுமன்றத்தை முற்றுகையிடவும் தயங்கமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டத்தில், ரப்பர் விவசாயிகள் சங்க துணை செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.அகஸ்டின், கேசவன் குட்டி,பத்மநாபன் நாயர், மாவட்ட பாசன சபை தலைவர் வின்ஸ் ஆன்டோ, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் செல்லப்பா, பூமிபாதுகாப்பு சங்க தலைவர் பத்மதாஸ், தடிக்காரன்கோணம் விவசாயிகள் சங்கத தலைவர் ரவி, முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் புஷ்பரதி, பிரேமா மற்றும் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story