தலைவனை தேர்வு செய்வதில் கேரளாவில் இருக்கும் புரிதல் தமிழகத்தில் இல்லை, மதுரையில் கொட்டும் மழையில் சீமான் பேச்சு


தலைவனை தேர்வு செய்வதில் கேரளாவில் இருக்கும் புரிதல் தமிழகத்தில் இல்லை, மதுரையில் கொட்டும் மழையில் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 28 Nov 2019 4:30 AM IST (Updated: 28 Nov 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

தலைவனை தேர்வு செய்வதில் கேரளாவில் இருக்கும் புரிதல் தமிழகத்தில் இல்லை என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் நனைந்தபடி சீமான் பேசினார்.

மதுரை,

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் மதுரை ஒத்தக்கடை பகுதியில் நேற்று மாலை நடந்தது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேச தொடங்கியபோது மழை குறுக்கிட்டது. இருப்பினும் அவர் பேச்சை நிறுத்தாமல் கொட்டும் மழையிலும் தொடர்ந்து பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழினத்திற்காக உயிர் நீத்தவர்களின் எண்ணங்களையும், கனவுகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். எனவே தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஒற்றுமையின் மூலமே அதிகாரம் ஒரு நாள் நம் கைக்கு வரும்.

தமிழகத்தில் ஆட்சி அமைத்து மக்களுக்காக வாழ வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை. தமிழர்களை தமிழர்கள் தான் ஆள வேண்டும். மற்றவர்கள் ஆளக்கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தமிழகத்தையும், தமிழக மக்களையும் நம்மை தவிர யாரும் காப்பாற்ற முடியாது.

தமிழகத்தின் வளர்ச்சி பற்றி பேசுவதற்கு இங்கு யாருக்கும் உரிமை கிடையாது. நாம் தமிழர் கட்சி கொண்டு வருகிற ஆட்சியானது, தமிழக மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும். தரமான கல்வி, நல்ல மருத்துவம் என ஏழை மக்களுக்கான ஆட்சியாக அமையும்.

தமிழக மக்கள் அரசியல் கட்சிகளின் போலியான பேச்சைக் கேட்டு அடிமையாக உள்ளனர். அதுபோல், நடிகர்களை தலைவர்கள் எனக் கூறும் மோசமான கூட்டம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. தமிழகத்தை போல் எந்த மாநில மக்களும் திரைத்துைறயினருக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. நமது அண்டை மாநிலமான கேரளாவில், நடிகர்களுக்கு அந்த மாநில மக்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். தலைவர்களை தலைவர்களாக பார்க்கிறார்கள்.

நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பார்க்கிறார்கள். மோகன்லால், மம்முட்டி போன்ற நடிப்பில் திறமை பெற்ற பெரிய நடிகர்கள் கேரளாவில் இருக்கிறார்கள். பெரிய நடிகர்கள் என்பதால் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கவில்லை. கேரளாவில் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. இந்த விஷயத்தில் கேரளாவில் இருக்கும் புரிதல் தமிழக மக்களுக்கு இல்லை.

நாட்டை காக்கும் ராணுவ வீரர் ஓய்வு பெற்றால் ஏதாவது ஒரு நிறுவனத்தின் காவலாளியாக பணியாற்றுகிறார். ஆனால் மக்கள் பணத்தில் அனைத்து வசதிகளுடன் வாழும் நடிகர்கள் ஓய்வு பெற்றால் நேரடியாக முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என நினைக்கிறார்கள். இதில் யாரை குற்றம் சொல்வது என்று தெரியவில்லை. தமிழக மக்களின் நிலைமையும் வேதனையான ஒன்று. திரைப்படத்தின் மூலம் தலைவனை தேர்ந்தெடுக்கக்கூடாது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் போன்றோர் ரசிகர்களைச் சந்திக்கிறார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி மக்களைச் சந்திக்கிறது. நடிகர்கள் தாங்கள் வாழவேண்டும் என நினைக்கிறார்கள். மக்கள் வாழ வேண்டும் என நாம் தமிழர் கட்சி நினைக்கிறது.

தமிழினத்திற்கு துரோகம் செய்த தி.மு.க.வை வீழ்த்துவதே நாம் தமிழர் கட்சியின் முக்கிய லட்சியமாகும். தி.மு.க.வை ஒரு போதும் வெற்றி பெற விடமாட்டோம்.

நாம் தமிழர் கட்சி, பிரபாகரன் படத்தை தவிர்த்தால் அதிக ஓட்டுகள் வாங்கலாம் என பலர் கூறுகிறார்கள். அதற்கு ஒரு போதும் முடியாது என்ற பதிலையே நான் கூறுவேன். கடந்த தேர்தலில் 17 லட்சம் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ளது. நாங்கள் தமிழர்கள் வாழ வேண்டும் என்று தான் நினைப்போம். எங்களின் கொள்கை நிச்சயம் ஒருநாள் வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story