உரம் விலை உயர்ந்ததற்கு தி.மு.க.வே காரணம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பகிரங்க குற்றச்சாட்டு


உரம் விலை உயர்ந்ததற்கு தி.மு.க.வே காரணம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பகிரங்க குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Nov 2019 4:30 AM IST (Updated: 28 Nov 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசில் தி.மு.க.இடம் பெற்றிருந்தபோது உரத்துக்கான மானியத்தை ரத்து செய்த உத்தரவில் அந்த கட்சி அமைச்சர் கையெழுத்திட்டார். தமிழகத்தில் உரம் விலை உயர்ந்ததற்கு நீங்கள்தான் காரணம் என தி.மு.க.மீது அமைச்சர் செல்லூர் ராஜூ பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

செய்யாறு, 

செய்யாறு டவுன் புதிய காஞ்சீபுரம் சாலையில் கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடியின் சார்பில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் டீசல், பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்க பதிவாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை பதிவாளர் காமாட்சி வரவேற்றார்.

இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பெட்ரோல் பங்க்கினை திறந்து வைத்தும், மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோலிட்டும் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கூட்டுறவு சங்கத்தின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது கூட்டுறவு சங்கம் மூலம் 35-வது பெட்ரோல் பங்க் திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முதல்-அமைச்சராக ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பேற்றபோது தமிழகத்தில் 26 இடங்களில் பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டது. தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் நலிவுற்று போய் இருந்தது. இப்போது எல்லோரும் பாராட்டும் வகையில் உள்ளது.

விவசாயிகள் வாழ்வில் நலம்பெற கூட்டுறவு சங்கத்தின் மூலமாக 88 லட்சத்து 54 ஆயிரத்து 303 நபர்களுக்கு ரூ.46 ஆயிரத்து 777 கோடி கடனுதவி வழங்கி சாதனை படைத்தது அ.தி.மு.க. அரசு. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 6 லட்சத்து 29 ஆயிரத்து 267 நபர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 939 கோடி பயிர் கடனை வட்டியில்லாமல் வழங்கி சாதனை படைத்துள்ளது.

பிரதம மந்திரி பயிர்காப்பீடு மூலம் கடந்த மாதம் வரை 26 லட்சத்து 14 ஆயிரத்து 926 விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரத்து 163 கோடியை பெற்றுக் கொடுத்து இந்திய அளவில் தமிழகம் முதலிடமாக திகழ்கிறது.

“மத்திய, மாநில அரசு விவசாயிகளுக்கு உரம் வழங்கவில்லை, தமிழகத்தில் உரத்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது” என்று மு.க.ஸ்டாலின்குற்றம்சாட்டுகிறார். தமிழகத்தில் 4 ஆயிரத்து 449 சங்கம் மூலம் விவசாயிகளுக்கு உரம் வழங்கிட 25-ந்தேதி நிலவரப்படி 23 ஆயிரத்து 58 டன் யூரியா, 18 ஆயிரத்து 419 டன் டி.ஏ.பி., 13 ஆயிரத்து 404 டன் எம்.ஓ.பி. 20 ஆயிரத்து 985 டன் காம்ப்ளக்ஸ் உரம் இருப்பில் உள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு ஞாபக மறதி வியாதி போல. கடந்த 2010-ம் ஆண்டு மத்திய அரசில் அங்கம் வகித்து மத்திய அமைச்சராக இருந்த போது இந்தியா முழுவதும் ரசாயன உரத்திற்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது, அதில் கையெழுத்திட்டவர் தி.மு.க அமைச்சர் தான். உங்களால் (தி.மு.க.வால்) உரம் விலை உயர்ந்து விட்டது. தி.மு.க. ஆட்சியில் சுயநலம் மட்டுமே இருந்தது, பொதுமக்கள், விவசாயிகள் பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை. இதனால் தமிழக மக்கள் விழித்துக்கொண்டு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றியை தந்து 2021-ம் தேர்தலிலும் அ.தி.மு.க அரசு தான் என முன்மொழிந்து உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து செய்யாறு பஸ் நிலையத்தில் புதிதாக குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ்களின் தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், செல்லூர் கே.ராஜூ மற்றும் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. குளிர்சாதன பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பஸ்கள் செய்யாறில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 5.15 மணி, 11.35 மணி, மாலை 6.40 மணி என 3 நேரங்களில் புறப்படுகிறது. அதே போல சென்னையிலிருந்து செய்யாறுக்கு காலை 8.15 மணி, பிற்பகல் 3 மணி, இரவு 10.30 மணிக்கு புறப்படுகிறது என மண்டல பொது மேலாளர் கே.ராகவன் தெரிவித்தார். அப்போது துணை பொது மேலாளர் பி.மணி, கிளை மேலாளர் விநாயகம் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Next Story