திருச்செந்தூர் பாரதியார் தெருவில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
திருச்செந்தூர் பாரதியார் தெருவில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் பாரதியார் தெரு பகுதி மக்கள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் தலைமையில் நேற்று திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் தனப்பிரியாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியின் பின்புறம் அமைந்துள்ள பாரதியார் தெரு பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு டாஸ்மாக் கடை அமைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. இங்கு டாஸ்மாக் கடை அமைத்தால், பொதுமக்கள் இடையே சமூக நல்லிணக்கம் சீர்குலைந்து, சாதி கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது.
திருச்செந்தூர் நகரின் பிரதான பைபாஸ் ரோடாக திகழும் இந்த சாலை வழியாகத்தான் குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம், நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் கோவில்களில் விழா நடைபெறும் காலங்களில் அனைத்து வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன.
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் ஆம்புலன்ஸ்களும், ஆம்னி பஸ்கள், கனரக வாகனங்கள் போன்றவையும் இந்த சாலை வழியாகவே செல்கின்றன.
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரெயில் நிலையம், பகத்சிங் பஸ் நிலையம், ரெயிலடி ஆனந்த விநாயகர் கோவில் போன்றவையும் பாரதியார் தெருவின் மிக அருகிலேயே உள்ளன. எனவே திருச்செந்தூர் பாரதியார் தெருவில் டாஸ்மாக் கடை அமைத்தால் மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படும். எனவே இங்கு டாஸ்மாக் கடை அமைக்க ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது. இல்லையெனில் பொதுமக்களை திரட்டி தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர் தனப்பிரியா, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story