நெல்லை புதுமாப்பிள்ளை கொலையில் காதல் மனைவியின் அண்ணன் உள்பட 5 பேர் சிக்கினர்
நெல்லை புதுமாப்பிள்ளை கொலையில் காதல் மனைவியின் அண்ணன் உள்பட 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 52). இவருடைய மகன் நம்பிராஜன் (23). இவர் அங்குள்ள பால் பண்ணையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தங்கபாண்டி மகள் வான்மதி (19) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு வான்மதி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நம்பிராஜன், வான்மதியை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் நெல்லை டவுன் வயல்தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வயல்தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியன் என்பவர் நம்பிராஜனிடம், உங்கள் இரண்டு குடும்பத்துக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை பேசி சமாதானம் செய்வதாக கூறி உள்ளார். அவர் கடந்த 25-ந்தேதி இரவு செல்போனில் நம்பிராஜனை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்கு நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை அருகே உள்ள ரெயில்வே கேட்டுக்கு வரும்படி அழைத்தார். அதை நம்பி நம்பிராஜனும் அங்கு சென்றார்.
அப்போது அங்கு நின்ற ஒரு கும்பல் நம்பிராஜனை வெட்டிக்கொலை செய்து விட்டு, அவரது உடலை ரெயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். அவரது உடல் மீது அந்த வழியாக சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் ஏறி இறங்கியதில், தலை துண்டானது.
இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் விமலன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த கொலை தொடர்பாக வான்மதியின் அண்ணன் செல்லசாமி, உறவினர்கள் செல்லத்துரை, முருகன் மற்றும் முத்துப்பாண்டியன், விசுவநாதன் ஆகிய 5 பேரை நேற்று பிடித்தனர். அவர்களிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story