தூத்துக்குடி-கொழும்பு இடையே படகு சேவை தொடங்க நடவடிக்கை - கனிமொழி எம்.பி.யிடம் தொழிற்சங்கத்தினர் மனு
தூத்துக்குடி-கொழும்பு இடையே படகு சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்க சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் ஜோபிரகாஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சங்கர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். உறுப்பினர் ராஜாஸ்டாலின் அறிமுக உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் கீதாஜீவன் எம்.எல்.ஏ., சங்க துணைத்தலைவர்கள் பிரேம்வெற்றி, தமிழரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் சார்பில் கனிமொழி எம்.பி.யிடம் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு கடல்நீரை குடிநீராக மாற்றும் தொழிற்சாலை அமைக்க வேண்டும், தூத்துக்குடியில் வெளித்துறைமுகத்துக்கு மத்திய அரசு ரூ.11 ஆயிரத்து 635 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்க பணிகளை விரைவுபடுத்த வேண்டும். தூத்துக்குடி, மணியாச்சி இடையே ஒரு மணி நேர இடைவெளியில் ரெயில் இயக்க வேண்டும். தூத்துக்குடியில் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு படகு சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட கனிமொழி எம்.பி., கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளிடம் பேசி விரைவில் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story