முன்கூட்டியே விடுதலையானவர்களுக்கு நிபந்தனைகள் விதிப்பு: மேலவளவு கொலை கைதிகள் 13 பேரும் வேலூரில் தங்கி இருக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


முன்கூட்டியே விடுதலையானவர்களுக்கு நிபந்தனைகள் விதிப்பு: மேலவளவு கொலை கைதிகள் 13 பேரும் வேலூரில் தங்கி இருக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 Nov 2019 10:15 PM GMT (Updated: 27 Nov 2019 8:56 PM GMT)

முன்கூட்டியே விடுதலையான மேலவளவு கொலை கைதிகள் 13 பேரும் வேலூரில் தங்கி இருக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்ததுடன், அவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது.

மதுரை, 

மதுரை மாவட்டம் மேலவளவு கிராமத்தில் கடந்த 1997-ம் ஆண்டு ஊராட்சி தலைவர் உள்பட 6 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 17 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டுகள் உறுதி செய்தன.

இந்தநிலையில் இந்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த 13 பேர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி சமீபத்தில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், இதுதொடர்பான அரசாணை நகல் வழங்கக்கோரி, மூத்த வக்கீல் ரத்தினம் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த அரசாணையையும், வழக்கு ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

பின்னர் இந்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடரவும் மனுதாரருக்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கி, விசாரித்தது. மேலவளவு கொலை வழக்கில் முன்கூட்டியே விடுதலையான 13 பேரும், இந்த வழக்கின் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் முன்பு நேற்று பகல் 12 மணி அளவில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, மேலவளவு கொலை வழக்கில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர், “இந்த வழக்கில் ஏற்கனவே விடுதலையானவர்கள் மேலவளவு கிராமத்தில்தான் உள்ளனர். அவர்களால் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. தற்போது விடுதலையானவர்களும் 15 ஆண்டுகளாக தண்டனையை அனுபவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 60 வயதாகிவிட்டது. இதை கருத்தில் கொண்டுதான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்வதற்கு முன்பாக எதிர்தரப்பு பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை சம்பந்தப்பட்ட குழு விவாதித்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.

பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில் கூறியிருந்ததாவது:-

* மேலவளவு கொலை வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட 13 பேரும், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடியும் வரை மேலவளவு கிராமத்துக்குள் நுழையக்கூடாது.

* அவர்கள் 13 பேரும் வேலூரில் தங்கியிருக்க வேண்டும்.

* மாதத்தில் 2-வது மற்றும் 4-வது ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூர் மாவட்ட நன்னடத்தை அலுவலர் முன்பாக ஆஜராக வேண்டும். மாதந்தோறும் முதலாவது மற்றும் 3-வது ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்பாக ஆஜராக வேண்டும்.

* அவர்களது முகவரி மற்றும் செல்போன் எண்களை மதுரை, வேலூர் போலீஸ் சூப்பிரண்டுகளிடம் அளிக்க வேண்டும். தற்போதைய செல்போன் எண்களை 13 பேரும் மாற்றக்கூடாது. பாஸ்போர்ட் வைத்திருந்தால் அதையும் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

* இந்த கோர்ட்டில் தகவல் தெரிவிக்காமல், அவர்கள் வேலூரில் இருந்து வெளியில் செல்லக்கூடாது. இந்த வழக்கு முடியும் வரை, மேலவளவு கொலை சம்பவம் குறித்து ஊடகங்களில் மனுதாரர் அல்லது வேறு அமைப்பை சேர்ந்தவர்களோ பேசக் கூடாது.

* இது தொடர்பாக எந்த கூட்டத்துக்கும் அனுமதி வழங்கக்கூடாது. முன்கூட்டியே விடுதலையான 13 பேரும் இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்..

பின்னர் வழக்கை வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Next Story