சோலை நகரில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் முள்வளைவு - வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


சோலை நகரில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் முள்வளைவு - வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Nov 2019 4:00 AM IST (Updated: 28 Nov 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

சோலைநகர் பகுதியில் கடல் அரிப்பினை தடுக்க தூண்டில் முள்வளைவு அமைக்கவேண்டும் என்று வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவையில் தானே புயலின்போது கடலில் எழுந்த ராட்சத அலைகளால் சோலை நகரில் உள்ள இளைஞர் விடுதியின் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. தற்போது கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் இளைஞர் விடுதியின் வளாகத்திற்குள் தங்களது படகுகளை நிறுத்த தொடங்கி உள்ளனர்.

இந்தநிலையில் இளைஞர் விடுதிக்கு காம்பவுண்டு சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பழைய காம்பவுண்டு சுவர் இருந்த இடத்திலேயே அதை கட்ட திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் அப்பகுதி மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்த இடம் வேண்டும் என்பதால் அதற்கு இடம்விட்டு காம்பவுண்டு சுவரை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பான பிரச்சினை தற்போது அங்கு நிலவி வருகிறது.

இந்தநிலையில் சப்-கலெக்டர் சுதாகர் நேற்று அங்கு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள், இளைஞர் விடுதி சங்கத்தினரிடம் கருத்து கேட்டார்.

வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சோலைநகர் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் முள் வளைவு அமைக்கவேண்டும் என்றும், இளைஞர் விடுதியின் காம்பவுண்டு சுவரை சற்று இடம்விட்டு கட்டவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கிடையே எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.15 லட்சம் செலவில் நடைபெறும் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு சீரமைப்பு பணிகளையும் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் கோகுலகிருஷ்ணன், ஆய்வாளர் கஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

அவர்களிடம் டிசம்பர் 31-ந்தேதிக்குள் அந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றும் 31-ந்தேதி இரவு புத்தாண்டு முதல் மணிக்கூண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்றும் அதிகாரிகளை வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார். அதிகாரிகளும் அதற்குள் பணிகளை முடித்து விடுவதாக உறுதியளித்தனர்.

Next Story