சேலத்தில் தரமற்ற உணவு தயாரித்த 70 ஓட்டல்கள் மீது வழக்கு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை


சேலத்தில் தரமற்ற உணவு தயாரித்த 70 ஓட்டல்கள் மீது வழக்கு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Nov 2019 3:45 AM IST (Updated: 28 Nov 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் தரமற்ற உணவு தயாரித்த 70 ஓட்டல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் உள்ள பல ஓட்டல்களில் தரமற்ற உணவுப்பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படுவதாக உணவுப்பொருள் பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தது. இதையொட்டி சேலம் மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தினர்.

இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் தரமற்ற உணவு தயாரிக்கப்படுவதாக எங்களுக்கு புகார் வந்தது. இதையொட்டி 110 ஓட்டல்களில் உணவு மாதிரி எடுத்து சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 70 ஓட்டல்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள் தரமற்று இருப்பதாக ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தவிர்க்க வேண்டும்

இதையொட்டி சம்பந்தப்பட்ட 70 ஓட்டல் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் செயற்கை சாயம் சேர்த்து “தயாரிக்கப்படும் கேசரி உள்ளிட்ட உணவு பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டால், ஜீரண மண்டலம் பாதிக்கப்படும். புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே இதுபோன்று தயாரிக்கப்படும் தரமற்ற உணவு பொருட்கள் சாப்பிடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் மாவட்டத்தில் தரமற்ற உணவு தயாரித்த 70 ஓட்டல்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story