கோவை மாநகராட்சியில், துப்புரவு பணியாளர் வேலைக்கு குவிந்த பட்டதாரிகள்
கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் வேலைக்கு பட்டதாரிகள் குவிந்தனர். கைக்குழந்தைகளுடன் ஏராளமான பெண்களும் வந்திருந்தனர்.
கோவை,
கோவை மாநகராட்சியில் 2 ஆயிரம் நிரந்தர துப்புரவு பணியாளர்களும், 1,500 ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 நிரந்தர துப்புரவு பணியாளர் வேலைக்கு கோவை மாநகராட்சி விண்ணப்பங்களை வரவேற்றது. அதன்படி 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான நேர்காணல் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதற்காக வந்த விண்ணப்பதாரர்கள் வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக நேர்காணல் நடத்தப்பட்டன. சாமியானா போடப்பட்டு அதில் அழைப்பு கடிதம் வைத்திருந்தவர்கள் மட்டும் அமர வைக்கப்பட்டனர். வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
அழைப்பு கடிதம் உள்ளவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. அதன்பின்னர் அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. தற்போது என்ன வேலை செய்கிறீர்கள்? என்பன உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதன் பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
துப்புரவு பணிக்கு ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். சில துப்புரவு பணியாளர்களின் மனைவியும் நேர்காணலுக்கு வந்திருந்தனர். மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களும், நேர்காணலில் கலந்து கொண்டனர்.
இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயது 21 என்றும் அதிகபட்ச வயது 56 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் வந்திருந்தனர். துப்புரவு பணிக்கான கல்வி தகுதி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேர்காணலுக்கு வந்த 70 சதவீதம் பேர் குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தனர். மேலும் டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள், பட்டதாரிகள், பட்டமேற்படிப்பு படித்தவர்கள், இரண்டு பட்டங்கள் பெற்றவர்கள் மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகளும் குவிந்தனர்.
நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள் கல்வி தகுதி சான்றிதழ்கள், வயது குறித்த மருத்துவ அலுவலரின் சான்று, சாதி சான்றிதழ், அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளிடம் இருந்து 1.9.2019-க்கு பிறகு பெறப்பட்ட புகைப்படத்துடன் கூடிய நன்னடத்தை சான்றிதழ், முன்னுரிமைக்கான சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களை கொண்டு வந்திருந்தனர்.
நேர்காணல் நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. நேர்காணல் நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஒரே நேரத்தில் ஏராளமான விண்ணப்பதாரர்கள் வந்ததால் அவர்களை கட்டுப்படு்த்த போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
துப்புரவு பணியாளர்களுக்கான வேலைக்கு நேற்று நடந்த நேர்காணலில் 2 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டனர். இன சுழற்சி அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அடிப்படை சம்பளம் ரூ.15,700 மற்றும் அலவன்சுகள், படிகள் சேர்த்தால் வேலையில் சேரும் போது மாத சம்பளம் ரூ.20 ஆயிரம் கிடைக்கும். அதிகபட்சம் அதாவது அனுபவம் வாய்ந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.
தற்போது நேர்காணல் முடிந்து விண்ணப்பதாரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முடிவுகள் பின்னர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். துப்புரவு பணிக்கு வந்த சிலர் கல்வி தகுதி இருப்பதால் சேர்ந்த பின்னர் உதவியாளர் பணிக்கு சேர்ந்து கொள்ளலாமா? என்று கேட்டனர். துப்புரவு பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால் அவர்கள் குப்பை அள்ளுதல் பணி தான் செய்ய முடியும். வேறு வேலைக்கு செல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story