கோவை கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு: மாவோயிஸ்டு ரூபேஷ் திடீர் கோஷம் - விசாரணை அடுத்த மாதம் 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
கோவை கோர்ட்டு வளாகத்தில் மாவோயிஸ்டு ரூபேஷ் திடீரென்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
கோவை,
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கடந்த 2015-ம் ஆண்டு பதுங்கியிருந்த மாவோயிஸ்டு ரூபேஷ், அவருடைய மனைவி ஷைனா மற்றும் கண்ணன், அனூப், வீரமணி ஆகிய 5 பேரை கியு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மாவோயிஸ்டு ரூபேஷ் மீதான வழக்கு கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து அவரை திருச்சூர் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அவர் போலீஸ் வேனில் இருந்து இறங்கியதும் திடீரென்று கோஷமிட்டார்.
ஜிந்தாபாத், ஜிந்தாபாத் மாவோயிஸ்டுகளுக்கு ஜிந்தாபாத், தியாகி நக்சல் பாரிகளுக்கு வாழ்த்துக்கள், கண்டிக்கிறோம். கண்டிக்கிறோம் என்கவுண்ட்டரை கண்டிக்கிறோம் என்று கோஷங்கள் எழுப்பினார். இதனால் கோவை கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
அதன் பின்னர் ரூபேஷ் நீதிபதி சக்திவேல் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(டிசம்பர்) 16-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின்னர் ரூபேஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
Related Tags :
Next Story