சிவாஜிபார்க் மைதானத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவது வாடிக்கையாகி விட கூடாது; ஐகோர்ட்டு கருத்து


சிவாஜிபார்க் மைதானத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவது வாடிக்கையாகி விட கூடாது; ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 28 Nov 2019 5:31 AM IST (Updated: 28 Nov 2019 5:31 AM IST)
t-max-icont-min-icon

சிவாஜிபார்க் மைதானத்தில்உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்க உள்ளநிலையில், அங்குநிகழ்ச்சிகள் நடத்துவது வாடிக்கையாகி விடக்கூடாது என ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

மும்பை, 

மும்பை தாதர் சிவாஜிபார்க் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் விழாவில் மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவி ஏற்கிறார்.

இந்த நிலையில், சிவாஜிபார்க் மைதானம் பொழுதுபோக்கு இடமா அல்லது விளையாட்டு மைதானமா என ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.சி.தர்மாதிகாரி, ஆர்.ஐ.சக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிவாஜிபார்க்கில் நடைபெற உள்ள உத்தவ் தாக்கரேயின் பதவி ஏற்பு நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்து நீதிபதிகள் கூறியதாவது:-

நாளை (இன்று) நடைபெறும் பதவி ஏற்பு விழா குறித்து நாங்கள் எதையும் கூற விரும்பவில்லை. அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விட கூடாது என்று பிரார்த்தனை செய்கிறோம். நீங்கள் (அதிகாரிகள்) பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். எல்லோருடைய உயிரையும் ஆபத்தில் சிக்க வைக்க முடியாது. இதுபோன்ற விழாக்களுக்கு அனைவரும் மைதானத்தை பயன்படுத்த விரும்புவார்கள். இங்கு நிகழ்ச்சிகள் நடத்துவது வாடிக்கையாகி விட கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விளையாட்டு அல்லாத நிகழ்ச்சியை சிவாஜிபார்க்கில் நடத்துவது குறித்த மும்பை மாநகராட்சி மற்றும் மாநில அரசின் கொள்கை குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். சிவாஜிபார்க் மைதானம் கடந்த 2010-ம் ஆண்டு மும்பை ஐகோர்ட்டால் அமைதி மண்டலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story