திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.
எலச்சிபாளையம்,
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டூர், ஆனங்கூர், மோடமங்கலம், தேவனாங்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டூர் ஊராட்சியில் 14-வது நிதித்திட்டத்தின் கீழ் ரூ.7.29 லட்சத்தில் பெத்தம்பட்டி - எலச்சிபாளையம் ராமாபுரம் சாலையில் பெத்தம்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் 400 மீட்டர் நீளத்திற்கு தார்சாலை அமைக்கப்பட்டுள்ள பணியினையும், ரூ.72,000 மதிப்பீட்டில் வள்ளுவர் தெரு ராஜகோபால் வீடு முதல் பைரவர் கோவில் வரை கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு உள்ளதையும், ரூ.3.27 லட்சத்தில் வள்ளுவர் தெரு முதல் கிருஷ்ணன் வீடு வரை ஓடை பகுதியில் பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் வட்டூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.61 ஆயிரத்தில் பெத்தம்பட்டி பகுதியில் 350-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும், மேலும் ரூ.2.29 லட்சத்தில் மரக்கன்றுகளுக்கு இடையில் மழைநீர் நிற்கும் வகையில் செவ்வக குழிகள் வெட்டப்பட்டு உள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டார்.
தொடர்ந்து வட்டூர் ஊராட்சி கணக்கம்பட்டி ஓடையில் ரூ.3.49 லட்சத்தில் கான்கிரீட் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளதையும், ரூ.20,000 மதிப்பீட்டில் பெத்தம்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணற்றுடன் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கப்பட்டு உள்ளதையும், ஆனங்கூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.3.49 லட்சத்தில் ஆனங்கூர் ஓடையில் கான்கிரீட் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளதையும், ரூ.34,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆனங்கூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வுகளின்போது திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட ஒன்றிய பொறியாளர், உதவி பொறியாளர் பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story