நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் ரகளை: வாகனங்களை அடித்து நொறுக்கிய 2 பேர் கைது


நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் ரகளை: வாகனங்களை அடித்து நொறுக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2019 3:45 AM IST (Updated: 28 Nov 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

விரும்பாக்கத்தில் நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டதுடன், வாகனங்களை அடித்து நொறுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், காந்திநகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு மொபட்டில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. திடீரென அவர்களில் 2 பேர், மொபட்டில் இருந்து இறங்கி, கையில் இருந்த பட்டா கத்தியால் அந்த வழியாக சென்றவர்களை மிரட்டியதுடன், அவர்களின் வாகனங்களையும் அடித்து நொறுக்கினார்கள்.

அந்த பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தினர். இதில் அங்கிருந்த ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது. மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து உடைத்தனர்.

சத்தம்கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது போதையில் மர்மநபர்கள் பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதையடுத்து ஆட்டோ டிரைவர் ஒருவர் அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா (வயது 21), ஆதித்யா (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக நேற்று முன்தினம் மதியம் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஒரு தரப்பினர் நள்ளிரவில் போதையில் பட்டா கத்தியுடன் மொபட்டில் அங்கு வந்ததும், ஆனால் தங்களுடன் தகராறில் ஈடுபட்டவர்கள் யாரும் கையில் சிக்காததால் பட்டாக்கத்தியுடன் ரகளை செய்ததுடன், அந்த வழியாக சென்ற வாகனங்களை நொறுக்கியும், சாலையில் அமர்ந்து பட்டா கத்தியை தரையில் உரசி பொதுமக்களை அச்சுறுத்தியதும் தெரிந்தது.

கைதான 2 பேரிடம் இருந்தும் பட்டா கத்திகள், மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான அவர்களின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story