வேதாரண்யம் இறால் பண்ணை அதிபர் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை


வேதாரண்யம் இறால் பண்ணை அதிபர் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை
x
தினத்தந்தி 28 Nov 2019 11:15 PM GMT (Updated: 28 Nov 2019 6:47 PM GMT)

வேதாரண்யம் இறால் பண்ணை அதிபர் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறையை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவர் இறால் பண்ணை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உள்ளது.

நேற்று முன்தினம் காலை 7.30 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 15 பேர் கொண்ட குழுவினர் திடீரென சுவாமிநாதனின் வீடு, திருமண மண்டபம், தங்கும் விடுதி ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை நள்ளிரவு தாண்டியும் நிறைவடையவில்லை. அவருக்கு உரிய தனியார் வங்கி லாக்கரிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இறால் பண்ணை உரிமையாளரின் வீடு, திருமண மண்டபம், தங்கும் விடுதி, வங்கி லாக்கரில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனை நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

2-வது நாளாக...

சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்ன? என்பது பற்றி அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக இறால் பண்ணை உரிமையாளருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.

அப்போது இறால் தொழில் குறித்த கணக்குகளை வருமான வரித்துறையினர் ஆராய்ந்து சரிபார்த்ததாக கூறப்படுகிறது. வருமான வரி சோதனையையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஏற்றுமதி நிறுவனம்

இதேபோல வேளாங்கண்ணி அருகே உள்ள நிருத்தனமங்கலம் பகுதியை சேர்ந்த இறால் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ராஜா (வயது 45) என்பவருடைய வீட்டில் நேற்று 2-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.

அப்போது வெளியாட்கள் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story