தூத்துக்குடியில் பாரத் பெட்ரோலியம் நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்


தூத்துக்குடியில் பாரத் பெட்ரோலியம் நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 28 Nov 2019 10:30 PM GMT (Updated: 28 Nov 2019 7:03 PM GMT)

தூத்துக்குடியில் பாரத் பெட்ரோலியம் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி, 

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதனை கண்டித்து பாரத் பெட்ரோலியம் நிறுவன ஊழியர்கள் நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி தூத்துக்குடியில் இயங்கி வரும், பாரத் பெட்ரோலியத்தின் சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் உள்பட சுமார் 85 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது.

இந்த நிறுவனத்துக்கு வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து தினமும் 24 டேங்கர் லாரிகள் மூலம் எரிவாயு கொண்டு வரப்படுகிறது. இந்த டேங்கர் லாரிகளில் இருந்து கியாஸ் இறக்காமல் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இங்கு தினமும் சுமார் 24 ஆயிரம் சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பி 72 லாரிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சி.ஐ.டி.யு. சார்பில் நேற்று காலை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பாரத் பெட்ரோலியம் ஊழியர்கள் சங்க தலைவர் மந்திரம் தலைமை தாங்கினார். அலுவலர்கள் சங்க தலைவர் கலையரசன், பாரத் பெட்ரோலியம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் லேனஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து கோ‌‌ஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, செயலாளர் ரசல், துணை தலைவர்கள் பொன்ராஜ், முனியசாமி, டென்சிங், மாரியப்பன், அப்பாத்துரை, மாவட்ட இணை செயலாளர்கள் முருகன், காசி, பெருமாள், சங்கரன், வின்சென்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story