பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசல் கந்தூரி விழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது


பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசல் கந்தூரி விழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 29 Nov 2019 3:30 AM IST (Updated: 2 Dec 2019 6:28 PM IST)
t-max-icont-min-icon

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

கடையம், 

தென்காசி மாவட்டம், கடையம் அடுத்துள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரிவிழாவை முன்னிட்டு நேற்று பகல் 2 மணிக்கு கீழூர் ஜமாஅத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட யானையில் நிறை பிறைக்கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாலை 6 மணிக்கு பள்ளிவாசல் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

இதில் கொல்லம், மேலப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அடுத்தமாதம் (டிசம்பர்) 7-ந் தேதி இரவு 8 மணிக்கு மேலூர் நாகூர் ஆண்டவர்கள் தைக்காவிலிருந்து பச்சைக்களை ஊர்வலம் நடைபெறுகிறது. 8-ந் தேதி காலை 10 மணிக்கு சுவாமி கம்முத்தவல்லி பரம்பரை தர்மகர்த்தா எஸ்.பி.‌ஷா இல்லத்தில் ராத்திபு ஓதும் நிகழ்ச்சியும், பகல் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றமும், 2 மணிக்கு மேலூர் ஜமாஅத்திலிருந்து இரவு கொடிஊர்வலம் தொடங்கி, மாலை 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. அன்று இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்டு ரவணசமுத்திரத்திலிருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு டிச.9-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலில் இனாம்தார் எஸ்.பி.‌ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தீப அலங்காரத்திடலில் தீப அலங்காரம் நடைபெறுகிறது. டிச.11-ந் தேதி மாலை 14-ம் நாள் இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டித்தலைவர் எஸ்.பி.‌ஷா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். கந்தூரியை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்புப் பஸ்களும், திருநெல்வேலி, செங்கோட்டையிலிருந்து ரெயில்கள் கூடுதல் பெட்டிகளுடனும் இயக்கப்படுகின்றன.

Next Story