பாபநாசம் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் நிரம்பியது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 142.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,755 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதுதவிர காட்டாற்று தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் கலந்து ஓடுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 2-வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாகவும், விழிப்புடனும் இருக்குமாறு அந்தந்த பகுதி வருவாய்துறை அதிகாரிகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 145 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 79 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1,040 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 35 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் பாபநாசம் கீழணையை கடந்து அகஸ்தியர் அருவிக்கு மேலே உள்ள கல்யாண தீர்த்தத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அங்கு பாறையின் நடுவே அமைந்திருக்கும் அகஸ்தியர், உலோகமுத்ரா சிலைகளின் பின்னணியில் இந்த காட்சி மிக ரம்மியமாக உள்ளது. அகஸ்தியர் அருவி, அதன் அருகில் உள்ள பாறைகள் மூழ்கி ஒரே ஆறாக புது வெள்ளம் ஓடுகிறது. இதனால் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் பாதையும், சிறிய பாலமும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
பாபநாசம் போக்குவரத்துக்கழக பணிமனை அருகே உள்ள வனத்துறை சோதனை சாவடி மூடப்பட்டது. அந்த வழியாக அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் செல்ல நேற்று வாகனங்களில் வந்தனர். ஆனால் அவர்கள் அருவிக்கு செல்ல தடை விதித்து, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதவிர காட்டாற்று வெள்ளம், தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், கிராம பகுதிகளில் பெய்த மழையால் ஓடைகளில் வந்து கலக்கும் தண்ணீர் ஆகியவை சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டவாறு பாய்ந்து ஓடுகிறது. குறுக்குத்துறையில் முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தவாறு செல்கிறது. சி.என்.கிராமம் சீனிவாசபெருமாள் கோவில் கல் மண்டபத்தை தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. தாமிரபரணி ஆற்றில் இருந்து கால்வாய்களிலும் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மருதூர் மேலகால்வாயில் 1,440 கன அடி, ஸ்ரீவைகுண்டம் தென்காலில் 1,230 கன அடி தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் நிரம்பி வழிகிறது. அந்த அணைகளுக்கு வருகிற தண்ணீர் அப்படியே உபரி நீராக ஆறுகளிலும், பாசனத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளது.
கடனாநதி அணையில் இருந்து 256 கன அடி, ராமநதி அணையில் இருந்து 50 கன அடி, கருப்பாநதி அணையில் இருந்து 25 கன அடி, குண்டாறு அணையில் இருந்து 22 கன அடி, அடவிநயினார் அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது. அவ்வப்போது வெயில் அடித்தது. நெல்லையில் பகலில் மழை இல்லை.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
அம்பை -12, சேரன்மாதேவி -1, நாங்குநேரி -1, பாளையங்கோட்டை -1, நெல்லை -2, பாபநாசம் -22, சேர்வலாறு -24, மணிமுத்தாறு- 8, கொடுமுடியாறு -5, கடனாநதி -7, ராமநதி -12.
Related Tags :
Next Story