இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் - விவசாயிகளுக்கு, கலெக்டர் வேண்டுகோள்


இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் - விவசாயிகளுக்கு, கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 Nov 2019 9:45 PM GMT (Updated: 28 Nov 2019 7:36 PM GMT)

இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று விவசாயிகளுக்கு, கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்த ‘கிசான் மேளா’ ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம் வரவேற்றார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி மேளாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற்ற கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்காக மாவட்ட அளவிலான இயற்கை வேளாண்மை உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்துகளை விவசாயத்துக்கு பயன்படுத்துவதால் நீர் மற்றும் மண்ணின் வளம் கெடுகிறது. இயற்கை வளத்தை நம்மால் உருவாக்க முடியாது. நமது வாழ்வாதார முன்னேற்றத்திற்காக வளங்களை அழித்து சென்று கொண்டு இருக்கிறோம். இயற்கை வளம் கடவுள் படைத்தது. இதனை அழிக்க நமக்கு அதிகாரம் கிடையாது.

நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைக்காய்கறிகள் வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், அதனை லட்சக்கணக்கான மக்கள் சாப்பிடுகிறார்கள். ரசாயன உரங்களால் காய்கறிகள் மூலம் நச்சுத்தன்மை உடல் நலத்தை பாதிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்பால் மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்கறிகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அதிகளவில் செயற்கை உரங்கள், மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து பலருக்கு தெரிவது இல்லை.

நாளடைவில் மண்ணில் மண்புழுக்களை காண முடியவில்லை. எனவே இயற்கை உரங்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்து விவசாயிகள் விவசாயம் செய்ய வேண்டும். இயற்கை முறையில் விவசாயம் செய்ய கால்நடைகள் தேவை அதிகமாக உள்ளது. இயற்கை விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு அரசின் திட்டங்களில் முன்னுரிமை வழங்க கருத்துருக்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு(2020) முதல் நீலகிரியில் ரசாயன உரங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இயற்கை விவசாயத்தில் நீலகிரி மாவட்டம் தமிழகத்திலேயே முன்னோடியாக திகழ விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும். சமீபத்தில் பெய்த தொடர் மழையால் கேத்தி பாலாடா பகுதியில் விளைநிலங்களில் மண்சரிந்து தண்ணீரோடு அடித்து செல்லப்பட்டது. இதற்கு காரணம் படிமட்ட முறையில் விவசாயம் செய்யாததே ஆகும். மலைச்சரிவான பகுதிகளில் சமமாக பயிரிடாமல், படிமட்ட முறையில் பயிரிட வேண்டும். அப்போது தான் மண்சரிவை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறவர்களுக்கு உழவன் விருது வழங்கப்பட்டது. பின்னர் இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சி நடந்தது. இதில் இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பழ வகைகள், கீரை வகைகள், நுண்ணுயிர் உரங்கள், மலைச்சரிவான இடங்களில் படிமட்ட முறையில் விவசாயம் செய்வது குறித்த மாதிரி, மண் பரிசோதனை எந்திரம், வேளாண் எந்திரங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இதனை விவசாயிகள் பார்வையிட்டனர். இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணைய தலைவர் மில்லர் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story