காரில் ரத்தக்கறை இருந்ததால் சிக்கினார் வன விலங்குகளை வேட்டையாடியவர் கைது


காரில் ரத்தக்கறை இருந்ததால் சிக்கினார் வன விலங்குகளை வேட்டையாடியவர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2019 4:45 AM IST (Updated: 29 Nov 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் வன விலங்குகளை வேட்டையாடியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 துப்பாக்கிகள், 20 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மறைமலை நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராபின்சன் (வயது 46). இவர் தன்னுடைய காரில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே சிறைத்துறை பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ள பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராபின்சன் ஓட்டிவந்த கார், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது ராபின்சன் வந்த காரில் ரத்தக்கறை இருப்பதை கண்ட போலீசார், அதுகுறித்து ராபின்சனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், போலீசார் அவரது காரை சோதனை செய்தனர். இதில் ரத்தக்கறையுடன் 2 துப்பாக்கி தோட்டாக்கள் காரில் இருந்தது.

3 துப்பாக்கிகள் பறிமுதல்

இதையடுத்து போலீசார் ராபின்சனை திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ராபின்சனிடம் உரிமம் பெற்ற 3 துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த துப்பாக்கிகளை கொண்டு அவர் நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைப்பட்டி காட்டு பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராபின்சனை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று, அவர் வைத்திருந்த 3 துப்பாக்கிகளையும், 20 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் விபத்தில் சிக்கிய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வன விலங்குகளை வேட்டையாடியதாக ராபின்சன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையில், விபத்தில் சிக்கிய காரில் ரத்தக்கறையுடன் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story