‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: சென்னை மாணவரின் விரல்ரேகையில் மாறுபாடு - மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் சென்னை மாணவரின் விரல் ரேகையில் மாறுபாடு உள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை,
சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த ரவிக்குமார், அவருடைய மகன் ரிஷிகாந்த் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் எங்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. மேலும் மதுரை ஐகோர்ட்டை அணுகும்படி உத்தரவிடப்பட்டது. தற்போது எங்களை போலீசார் தேடிவருகின்றனர். வீட்டிலும் சோதனை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் எங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ரிஷிகாந்த்தின் விரல் ரேகையை, நீட் தேர்வின்போது பதிவான விரல் ரேகையுடன் சரிபார்க்க அனுப்பப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, 'ரிஷிகாந்த்தின் விரல் ரேகையும், அவர் நீட் தேர்வு எழுதியபோது பதிவான விரல் ரேகையும் மாறுபட்டுள்ளது. வெவ்வேறு ரேகைகளாக உள்ளன' என்றார். பின்னர் அது தொடர்பான ஆவணங்களையும் நீதிபதி முன்பு சமர்ப்பித்தார்.
இதையடுத்து நீதிபதி, ’ரிஷிகாந்த்தின் தந்தை ரவிக்குமார் நீட் தேர்வு முறைகேடு வழக்குகளை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி முன்பு நாளை (அதாவது இன்று) காலை 10:30 மணியளவில் ஆஜராகி, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நடந்த சம்பவத்தை தெரிவிக்க வேண்டும். உண்மையை தெரிவிக்கும்பட்சத்தில் முன்ஜாமீன் குறித்து பரிசீலிக்கப்படும்‘ என்றார்.
பின்னர் இந்த வழக்கு விசாரணையை இன்று (29-ந்தேதி) பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story