வெங்கமேடு வாய்க்காலில் குப்பைகள் அடைப்பு: சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி


வெங்கமேடு வாய்க்காலில் குப்பைகள் அடைப்பு: சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 29 Nov 2019 4:15 AM IST (Updated: 29 Nov 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

கரூர் வெங்கமேடு வாய்க்காலில் குப்பைகள் அடைத்து கொண்டதால், தண்ணீர் வழிந்தோடி அங்குள்ள சாலையில் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

கரூர்,

கரூர் வெங்கமேடு ரெயில்வே மேம்பாலம் அருகே பள்ளப்பாளையம் ராஜவாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாததால் குப்பைகள், இறைச்சி கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டு பராமரிப்பின்றி இருந்தது. மேலும் சீமைக்கருவேல மரங்களும் முளைத்து புதர்மண்டி உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்ததால் இந்த வாய்க்காலில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. வெங்கமேட்டில் இந்த வாய்க்காலின் குறுக்கே சிறிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்திற்கு அடியில் குப்பைகள் அடைத்து கொண்டதால் தண்ணீர் அந்த பாலத்தின் மேல்புறம் வழியாக நிரம்பி வழிந்து சாலையில் தேங்கியது. இதன் காரணமாக அங்குள்ள சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதால், கார், லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த தண்ணீரில் தத்தளித்தபடியே சிரமத்துடன் சென்றனர்.

சீரமைப்பு பணியில் வருவாய் துறையினர்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று காலை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா உள்பட வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து சாலை ஓரமாக பள்ளம் தோண்டி அந்த நீர் வழிந்தோட வழிவகை செய்தனர். மேலும் கழிவுநீரை உறிஞ்சும் லாரி வரவழைக்கப்பட்டு சாலையில் தேங்கிய நீரை ராட்சத குழாய் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. மேலும் வாய்க்கால் பாலத்தின் கீழ்புறம் தேங்கியுள்ள குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வாய்க்காலின் நீர் அங்குள்ள பாதாள சாக்கடையிலும் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக வெங்கமேடு பாலத்தின் கீழ் பகுதியில் கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டது. கரூர் டவுன் போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.

பொதுமக்கள் கோரிக்கை

கரூர் லைட்அவுஸ் கார்னர் அமராவதி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் ரெட்டைவாய்க்கால், கரூர் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தான் செல்கிறது. எனினும் அந்த வாய்க்காலில் தேங்கிய குப்பைகளை நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. எனவே அந்த வாய்க்காலில் குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும். மேலும் வெங்கமேடு ராஜவாய்க்காலை தூர்வாரி அழப்படுத்த வேண்டும். இறைச்சி கடைக்காரர்கள் உள்ளிட்டோர் கழிவுகளை வாய்க்காலில் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story