கள்ளக்குறிச்சி பகுதியில் பலத்த மழை: கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை கட்டிடம் இடிந்து விழுந்தது - ரூ.50 லட்சம் சேதம்


கள்ளக்குறிச்சி பகுதியில் பலத்த மழை: கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை கட்டிடம் இடிந்து விழுந்தது - ரூ.50 லட்சம் சேதம்
x
தினத்தந்தி 29 Nov 2019 3:30 AM IST (Updated: 29 Nov 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்த பலத்த மழையின்போது கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில் கரும்பு அரவை பிரிவு, கரும்புச்சாறு தயாரிக்கும் பிரிவு, சுண்ணாம்பு பால் தயாரிக்கும் பிரிவு என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் இந்த ஆலைக்கு கச்சிராயப்பாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் போன்ற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்யும் கரும்புகளை அனுப்பி வைப்பார்கள்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, கச்சிராயப்பாளையம், தியாகதுருகம், திருக்கோவிலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது இரவு 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை வெளுத்து வாங்கியது.

அப்போது சர்க்கரை ஆலை வளாகத்தில் சுண்ணாம்பு பால் தயாரிக்கும் பிரிவுக்கான 800 சதுர அடி கட்டிடம் மேற்கூரையுடன் இடிந்து விழுந்தது. இதில் அந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த சுண்ணாம்பு பால் தயாரிப்பதற்கான உபகரணங்கள், தளவாட பொருட்கள் மற்றும் இடிந்து விழுந்த கட்டிடம் என மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தற்போது அரவை பணி நிறுத்தப்பட்டிருந்ததால், அந்த பிரிவில் தொழிலாளர்கள் யாரும் பணிபுரியாததால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சிவமலர், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவர் ராஜசேகர், துணைத் தலைவர் பாபு ஆகியோர் நேற்று காலை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மழையால் இடிந்து விழுந்த கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்த பலத்த மழையால் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story