யானை தாக்கியதில் பலியான, பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம்


யானை தாக்கியதில் பலியான, பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2019 4:00 AM IST (Updated: 29 Nov 2019 5:42 AM IST)
t-max-icont-min-icon

யானை தாக்கியதில் பலியான பெண்ணின் உடலை வாங்க மறுத்து அவரின் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பெரும்பாறை அருகே, பெரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மன்றகால்வாய் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 50). அவருடைய மனைவி ஜெயலட்சுமி (40). நேற்று முன்தினம் இவர்கள் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் காபி பழம் பறித்துக்கொண்டிருந்தனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதியும் (35) காபி பழம் பறித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டுயானை ஒன்று அவர்கள் 3 பேரையும் துரத்தியது.

இதனால் பதற்றமடைந்த 3 பேரும் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடினர். ஆனால் அவர்களை பின்தொடர்ந்து வந்த யானை 3 பேரையும் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர்களை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார். நேற்று அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலட்சுமியின் உறவினர்கள் மற்றும் கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பிணவறையை முற்றுகையிட்டனர். பின்னர் காட்டுயானைகளை வேறு இடத்துக்கு வனத்துறையினர் விரட்ட வேண்டும். அதுவரை ஜெயலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. அப்படியே பிரேத பரிசோதனை செய்தாலும் அவருடைய உடலை நாங்கள் வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே பொதுமக்களின் போராட்டம் குறித்து அறிந்த பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் காட்டுயானைகளால் இதுவரை 5 பேர் இறந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே காட்டுயானைகளை நிரந்தரமாக கொடைக்கானல் வனப்பகுதியை விட்டு விரட்ட வேண்டும் என்று எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.

பின்னர் பேசிய எம்.எல்.ஏ. செந்தில்குமார், காட்டுயானைகளை வேறு இடத்துக்கு விரட்டுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதையடுத்து கலெக்டர் அலுவலகம் சென்ற எம்.எல்.ஏ. காட்டுயானை பிரச்சினை குறித்து கலெக்டரிடம் மனு அளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் காட்டுயானைகள் தொல்லை அதிகரித்திருப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், வனத்துறை அமைச்சரிடமும் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.க. சார்பில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Next Story