மராட்டிய புதிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு; 6 மந்திரிகளும் பதவி ஏற்றனர்
மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் நடந்த கோலாகல விழாவில் மராட்டிய புதிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 மந்திரிகளுக்கும் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மும்பை,
மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.
இதன் காரணமாக, கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்காக கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து சிவசேனா ‘மகா விகாஷ் முன்னணி' என்ற கூட்டணியை அமைத்தது.
23-ந் தேதி எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவாரை தன் பக்கம் இழுத்து பாரதீய ஜனதா திடீர் அரசாங்கத்தை அமைத்தது. இதை எதிர்த்து சிவசேனா கூட்டணி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட அடுத்த சில மணி நேரத்தில், துணை முதல்-மந்திரி பதவி வகித்த தேசியவாத காங்கிரசின் அஜித்பவார், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் அடுத்தடுத்து பதவி விலகினர். இதன் மூலம் பாரதீய ஜனதா அரசாங்கத்தின் ஆயுள் 4 நாட்களில் முடிந்தது.
இதையடுத்து சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைக்க முடிவு செய்தன. மகா விகாஷ் அகாடி (மராட்டிய வளர்ச்சி முன்னணி) என்று பெயரிடப்பட்ட இந்த கூட்டணி சார்பில், முதல்-மந்திரி பதவிக்கு சிவசேனா தலைவரான 59 வயது உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். அவர்கள் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அதனை ஏற்று கவர்னரும் ஆட்சி அமைக்க அழைத்தார்.
இந்த நிலையில், புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் சமாதி உள்ள மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.
ஏற்கனவே 1995 முதல் 1999-ம் ஆண்டு வரை பாரதீய ஜனதா ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைத்து இருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைவதால் பதவி ஏற்பு விழா பிரமாண்டமாக நடந்தது. சிவாஜிபார்க் மைதானத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கொடிகள் பட்டொளி வீசி பறந்தன.
விழா மேடைக்கு உத்தவ் தாக்கரே தனது மனைவி ராஷ்மி தாக்கரேயுடன் வந்தார். அவர் காவி நிற குர்தா அணிந்து இருந்தார். நெற்றியில் திலகமிட்டு இருந்தார்.
கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி வருகையை தொடர்ந்து, பதவி ஏற்பு விழா சரியாக 6.40 மணிக்கு தொடங்கியது. முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு கவர்னரை அரசின் தலைமை செயலாளர் அஜாய் மேத்தா கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, மேடையில் வைக்கப்பட்டு இருந்த மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை வணங்கி விட்டு, மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். கடவுளின் பெயரில் அவர் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
உத்தவ் தாக்கரே பதவி ஏற்ற உடன் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து இட்டு விட்டு, கவர்னரிடம் வாழ்த்து பெற்றுக்கொண்டார். பின்னர் மேடையின் மையப்பகுதிக்கு வந்து கூட்டத்தினரை நோக்கி இருகைகளையும் கூப்பி தலைதாழ்த்தி வணங்கி விட்டு தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தார்.
இதைத் தொடர்ந்து 3 கட்சிகள் சார்பிலும் தலா 2 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரசின் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால், காங்கிரசின் பாலசாகேப் தோரட், நிதின் ராவத் ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்த புதிய கூட்டணி ஆட்சியில் தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த விழாவில் துணை முதல்-மந்திரியாக யாரும் பதவி ஏற்கவில்லை. விரைவில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
பதவி ஏற்பு விழாவில் பாரதீய ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அக்கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அமகது பட்டேல், மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.
மராட்டியத்தின் 19-வது முதல்-மந்திரியாக பதவி ஏற்ற உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் பதவி ஏற்ற 3-வது முதல்-மந்திரி ஆவார். இதற்கு முன் அந்த கட்சி தலைமையில் நடந்த ஆட்சியில் மனோகர் ஜோஷியும், பின்னர் நாராயண் ரானேயும் முதல்-மந்திரியாக பதவி வகித்து இருந்தனர்.
மராட்டியத்தில் புதிய அரசு அமைந்ததன் மூலம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.
Related Tags :
Next Story