திருப்பத்தூர் மாவட்ட முதல் குறைதீர்வு கூட்டம் 2-ந் தேதி நடக்கிறது - கலெக்டர் சிவன்அருள் தகவல்
தற்காலிக கலெக்டர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட முதல் குறைதீர்வு கூட்டம் 2-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் என்று கலெக்டர் சிவனஅருள் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் நேற்று தற்காலிக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு (பழைய வட்டார வளர்ச்சி அலுவலகம்) வந்து குத்துவிளக்கேற்றி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அவர், முறைப்படி பொறுப்பேற்று கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பத்தூர் மையப்பகுதியில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலகம் உள்ளிட்ட பிற அலுவலகங்களின் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான அனுமதி கடிதம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், சுதந்திர போராட்ட தியாகிகள் குறைதீர்வு கூட்டம் உள்ளிட்ட அனைத்தும் படிப்படியாக நடத்த ஏற்பாடு செய்யப்படும். திருப்பத்தூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீஸ் சூப்பிரண்டு உடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
திருப்பத்தூர் மாவட்டம் குறித்து செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. ஒவ்வொன்றும் படிப்படியாக செய்யப்படும். துறைசார்ந்த அதிகாரிகள் ஒவ்வொருவராக நியமிக்கப்பட்டு வருகின்றனர். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்ட முதல் குறைதீர்வு கூட்டம் 2-ந் தேதி (திங்கட்கிழமை) தற்போதைய கலெக்டர் அலுவலகத்தில் (ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்) நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சப்-கலெக்டர் வந்தனா கார்க், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா, தாசில்தார் அனந்தகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம், முருகேசன், தயாளன், பிரபாவதி, மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story