திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவண்ணாமலை,
உலக புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கையம்மன் கோவிலில் துர்க்கையம்மன் உற்சவம் நடைபெற்றது. பின்னர் இரவில் துர்க்கையம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
இதனையடுத்து நேற்று மாலையில் பிடாரியம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சியையொட்டி சிறப்பு பூஜை நடத்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று (சனிக்கிழமை) விநாயகர் உற்சவம் நடக்கிறது. பின்னர் இரவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் வீதி உலா நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணியில் இருந்து 7.05 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கொடியேற்றத்தை தொடர்ந்து காலையில் வெள்ளி விமானங்களில் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், விநாயகர், பராசக்தி அம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, அம்ச, சிம்ம வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது.
தொடர்ந்து விழா நடைபெறும் நாட்களில் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற உள்ளது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
தீபத் திருவிழாவையொட்டி கோவிலில் தங்க கொடி மரம், பலி பீடம் போன்றவை சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது. மேலும் கோவிலில் நவ கோபுரங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. தீபத் திருவிழாவின் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story