குன்னூரில் தொடர் மழை: காட்டேரி பூங்காவில் மலர்கள் அழுகின
குன்னூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், காட்டேரி பூங்காவில் மலர்கள் அழுக தொடங்கி உள்ளன.
குன்னூர்,
குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் காட்டேரி பூங்கா அமைந்து உள்ளது. இது 5 ஏக்கர் பரப்பளவில் இயற்கை அன்னையின் அரவணைப்பில் காணப்படுகிறது. குன்னூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டேரி பூங்காவில், பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சமவெளி பகுதிகளில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் காட்டேரி பூங்காவுக்கு செல்ல தவறுவது இல்லை. இது நீண்ட தொலைவு பயணித்த அயர்வை போக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் ஏற்ற இடமாக திகழ்கிறது.
இதனாலேயே காட்டேரி பூங்காவில் நேரத்தை செலவழிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் நடந்து முடிந்த 2-வது சீசனையொட்டி காட்டேரி பூங்காவில் சுமார் 1 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தது. அதில் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்கி, சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. தற்போது குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் போதிய வெயில் இன்றி மேகமூட்டம் காணப்படுகிறது. இதையொட்டி பூங்காவில் உள்ள செடிகளில் மலர்கள் அழுக தொடங்கி விட்டன. அழுகிய மலர்களை செடிகளில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 2-வது சீசனையொட்டி நடவு செய்யப்பட்ட மலர் செடிகளை அகற்றிவிட்டு, அடுத்த ஆண்டு நடைபெறும் கோடை சீசனுக்காக புதிய மலர் செடிகளை நடவு செய்யவும் திட்டமிட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story