தூத்துக்குடியில் பயங்கரம்: பால் வியாபாரி குத்திக்கொலை - கோர்ட்டில் ஒருவர் சரண்


தூத்துக்குடியில் பயங்கரம்: பால் வியாபாரி குத்திக்கொலை - கோர்ட்டில் ஒருவர் சரண்
x
தினத்தந்தி 29 Nov 2019 11:15 PM GMT (Updated: 29 Nov 2019 5:30 PM GMT)

தூத்துக்குடியில் பால் வியாபாரி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் கோவில்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள டி.சவேரியர்புரத்தை சேர்ந்தவர் அந்தோணி முத்து என்ற தங்கராஜ் (வயது 62). இவர் தூத்துக்குடி ஜே.ஜே.நகரில் தனக்கு சொந்தமான இடத்தில் மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் அந்தோணி முத்து ஜே.ஜே.நகரில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற துறைமுக ஊழியரான நடராஜன் (60) என்பவருக்கு விற்றார். இவர்களது இடத்துக்கு நடுவே ஒரு சுவர் உள்ளது. அந்த சுவரை பொதுச்சுவராக பயன்படுத்துவது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை இருந்தது. தற்போது நடராஜன் அந்த சுவருடன் இணைத்து வீடு கட்டி வருகிறார். ஆனால், அந்த சுவரில் இணைத்து வீடு கட்டக்கூடாது என்று அந்தோணி முத்து கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

அந்தோணி முத்து இரவு நேரங்களில் ஜே.ஜே.நகரில் உள்ள இடத்தில் தூங்குவது வழக்கம். அவர் நேற்று முன்தினம் இரவும் அங்கு தூங்கினார். நேற்று அதிகாலையில் நடராஜன் தரப்பினர் அங்கு வந்து அந்தோணி முத்துவை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த அந்தோணி முத்து அங்கிருந்து தப்பித்து தனது வீட்டுக்கு ஓடியுள்ளார். ஆனால், வழியிலேயே அவர் சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து நடராஜன் தரப்பினர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்தோணி முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடராஜன் உள்ளிட்டவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நடராஜன் கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை வருகிற டிசம்பர் 10-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

நடராஜனை காவலில் எடுத்து விசாரணை நடத்த தாளமுத்துநகர் போலீசார் முடிவு செய்து உள்ளனர். பொதுச்சுவர் பிரச்சினையில் பால் வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story