வால்பாறையில், பள்ளிக்கூட கதவு, ஜன்னலை உடைத்து காட்டுயானை அட்டகாசம்
வால்பாறையில் அரசு உயர்நிலைப்பள்ளிக் கூடத்தின் கதவு, ஜன்னலை உடைத்து காட்டுயானை அட்டகாசம் செய்தது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாப்பை ஏற்படுத்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை,
வால்பாறை பகுதியில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்டபட்ட வனப் பகுதிகளை ஒட்டிய எஸ்டேட்டுகளில் அதிகளவில் காட்டுயானைகள் தனியாகவும், கூட்டம் கூட்டமாகவும் சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு காட்டுயானை சிங்கோனா எஸ்டேட் அரசு உயர்நிலைப் பள்ளிக்கூட வளாகத்திற்குள் புகுந்து வகுப்பறையின் கதவு ஜன்னலை உடைத்து சேதப்படுத்தி விட்டு அருகிலிருந்த சத்துணவு மைய கட்டிடத்தையும் உடைத்து உள்ளிருந்த பொருட்களை வெளியே எடுத்து வீசி அட்டகாசம் செய்தது. மேலும் அங்கிருந்த குடிதண்ணீர் குழாய்களையும் உடைத்து சேதப்படுத்தியதால் எஸ்டேட் குடியிருப்பு பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் வினியோகமும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர் கூறியதாவது:-
சிங்கோனா எஸ்டேட் அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடம் கடந்த 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் சிங்கோனா, பெரியகல்லார், சின்னக்கல்லார், உபாசி, ஈட்டியார், கல்லார், நீரார், ரயான் டிவிஷன் ஆகிய எஸ்டேட் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் படித்து வந்தனர். தற்போது வால்பாறை பகுதியை விட்டு எஸ்டேட் தொழிலாளர்கள் வெளியூர்களுக்கு செல்லத் தொடங்கியதால் தற்போது இந்த பள்ளிக்கூடத்தில் 70 மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். இதில் 10-ம் வகுப்பு படிக்கும் 20 மாணவ,மாணவிகளுக்கு அரசின் உத்தரவின் பேரில் அதிக தேர்ச்சி சதவிகிதத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக காலை நேரத்தில் 8.15 மணிமுதல் 9.15 மணிவரையும், மாலை நேரத்தில் 4.15 மணி முதல் 5.15 மணிவரையும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.ஆனால் பள்ளிக்கூட வளாகம் முழுவதும் புதர் மண்டி, பாதுகாப்பு சுற்று சுவர் இல்லாத நிலையில் இருந்து வருகிறது. இதனால் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்துவிடும் அச்சம் தொடர்கிறது.
இதன் காரணமாக பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவ,மாணவிகளுக்கும் குறிப்பாக சிறப்பு வகுப்புகளுக்கு வரும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ,மாணவிகளுக்கும் பாதுகாப்பற்ற நிலையே உள்ளது. இதனால் பள்ளிக்கூடம் முடிந்தும், சிறப்பு வகுப்புகள் முடிந்தும் மாணவ,மாணவிகளை பாதுகாப்பாக பஸ்களில் ஏற்றி வீடுகளுக்கு அனுப்பும் வரையில் ஆசிரியர்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது. இதனால் ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகவேண்டியுள்ளது. எனவே பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுப்பணிதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கூட வளாகத்தை உரிய பராமரிப்பு செய்து சுற்றுசுவர் அமைத்து, பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்து மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே வால்பாறை பகுதியில் உள்ள பல பள்ளிக்கூடங்கள் மாணவ,மாணவிகள் இல்லாமல் மூடப்பட்ட நிலையில் குறைந்தளவே படிக்கும் மாணவ,மாணவிகளுக்காவது பாதுகாப்பு வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story