சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தேடப்பட்ட நெல்லையை சேர்ந்த வாலிபர் திருப்பூரில் கைது


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தேடப்பட்ட நெல்லையை சேர்ந்த வாலிபர் திருப்பூரில் கைது
x
தினத்தந்தி 30 Nov 2019 4:15 AM IST (Updated: 30 Nov 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தேடப்பட்ட நெல்லையை சேர்ந்த வாலிபரை தனிப்படை போலீசார் திருப்பூரில் கைது செய்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

திருப்பூர், 

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 4 பேர் சேர்ந்து 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அந்த வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புதூர் அருகே கருவந்தா பகுதியை சேர்ந்த முருகன்(வயது 25) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் முருகன், திருநெல்வேலியில் இருந்து பஸ் ஏறி திருப்பூர் வருவதாக திருப்பூர் மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின்படி, துணை கமிஷனர் பத்ரி நாராயணன் மேற்பார்வையில் தெற்கு உதவி கமிஷனர் நவீன்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், ஏட்டு ரவிக்குமார், காவலர்கள் ராஜசேகர், வரதராஜன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு பழைய பஸ் நிலையத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் முருகன் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் வந்து இறங்கியதும் தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் ஆலங்குளம் மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளிர் போலீசார் திருப்பூர் வந்ததும் அவர்களிடம் முருகனை ஒப்படைத்தனர்.

சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார், துணை கமிஷனர் பத்ரி நாராயணன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Next Story