ரேஷன் கடைகளில் பொருட்கள் குறைக்கப்படுவதை கண்டித்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம்
ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்களின் அளவு குறைக்கப்படுவதை கண்டித்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் 2-ந் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குழித்துறை,
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் மார்த்தாண்டம் அருகே காஞ்சிரகோட்டில் உள்ள மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். குழித்துறை நகர தலைவர் அருள்ராஜ், பத்மநாபபுரம் நகர தலைவர் ஹனுகுமார், வட்டார தலைவர்கள் குமார், மோகன் தாஸ், ஜாண் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது, திடீரென்று ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்களின் அளவை அரசு குறைத்துள்ளது. அதாவது ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் தலா நூறுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத தமிழக அரசையும் பொதுவினியோகத் துறையையும் கண்டித்து 2-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு குமரி மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய 4 வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் உள்ளிருப்பு போராட்டங்கள் நடைபெறும் என தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story