கொல்லங்கோடு அருகே, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; பட்டதாரி பலி


கொல்லங்கோடு அருகே, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; பட்டதாரி பலி
x
தினத்தந்தி 30 Nov 2019 4:15 AM IST (Updated: 30 Nov 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கல்லூரி பஸ் மோதியதில் பட்டதாரி பலியானார்.

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே  செறுகுழி பகுதியை சேர்ந்தவர் லீனஸ். இவருடைய மூத்த மகன் அஜின்(வயது 23). இவர் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பட்டதாரியான அஜின், களியக்காவிளையில் ஒரு தனியார் தேர்வு எழுதுவதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர், தேர்வு எழுதிவிட்டு மாலை மோட்டார் சைக்கிளில் களியக்காவிளையில் இருந்து ஊரம்பு சாலையில் வந்து கொண்டிருந்தார்.

மங்குழி பகுதியில் வரும்போது, எதிரே நின்று கொண்டிருந்த ஒரு பள்ளி வாகனத்தில் இருந்து மாணவர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீெரன அந்த பள்ளி வாகனத்தை முந்திக்கொண்டு ஒரு கல்லூரி பஸ் வேகமாக வந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் கல்லூரி பஸ் அஜினின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜின் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனே, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அஜின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து லீனஸ் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story