திருச்சியில் அழுகிய வெங்காய பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்
திருச்சியில் அழுகிய வெங்காய பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் அரை நிர்வாண கோலத்தில் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அரை நிர்வாண கோலத்தில் கழுத்தில் அழுகிய வெங்காய பயிர்களை மாலையாக அணிந்தபடி வந்தனர்.
அவர்கள் வெங்காயம் நன்றாக விளைந்த காலத்தில் குடோன்களில் சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? வெங்காயத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யாதே, வெங்காயம் பயிர் செய்த விவசாயிகளுக்்கு இழப்பீடு வழங்கு, பயிர்கடன்களை தள்ளுபடி செய் என்பது போன்ற கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தின்போது நாச்சம்மா என்ற பெண் விவசாயி மயக்கம் அடைந்து தரையில் விழுந்தார். அவரது முகத்தில் உடனடியாக தண்ணீர் தெளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 4 விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாசலில் இருந்து கலெக்டரின் கார் நிறுத்தப்படும் இடம் வரை தரையில் உருண்டபடியே சென்றனர். பின்னர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து கொண்டிருந்த அரங்கிற்குள் அய்யாக்கண்ணு உள்ளிட்ட நிர்வாகிகள் சென்று மனு கொடுத் தனர்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் அதன் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் கலெக்டர் அலுவலக வாசல் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா செய்தனர். அவர்கள் தங்களது கைகளில் அழுகிய வெங்காய பயிர்களை தூக்கி பிடித்தபடி இழப்பீடு கேட்டு கோஷம் போட்டனர்.
பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் துறையூர் தாலுகா செல்லிப்பாளையத்தில் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் ரப்பர் புழு தாக்கி அழுகிவிட்டது. தோட்டக்கலை துறை பரிந்துரை செய்த மருந்துகளை அடித்தும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story