மாவட்ட செய்திகள்

அனகாபுத்தூரில் தவறான சிகிச்சையால் இளம்பெண் இறந்ததாக உறவினர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு + "||" + In Anakaputhur Adolescent death by ill treatment Relatives blocked the road - transport impact

அனகாபுத்தூரில் தவறான சிகிச்சையால் இளம்பெண் இறந்ததாக உறவினர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

அனகாபுத்தூரில் தவறான சிகிச்சையால் இளம்பெண் இறந்ததாக உறவினர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
அனகாபுத்தூரில் தனியார் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் இளம்பெண் இறந்ததாக கூறி அவரின் உறவினர்கள் 2 முறை சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாம்பரம், 

சென்னையை அடுத்த குன்றத்தூர் தரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நித்யா (வயது 23). இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் அனகாபுத்தூரில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கிற்கு அவரது பெற்றோர் அழைத்துச்சென்றனர். அங்கு நித்யாவை பரிசோதித்து பார்த்த டாக்டர், அவருக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது. அடுத்த சில நிமிடங்களில் நித்யா, அங்கேயே மயங்கி விழுந்தார்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், நித்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டரின் தவறான சிகிச்சையால்தான் தங்கள் மகள் இறந்துவிட்டதாக சங்கர்நகர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தவறான சிகிச்சையால்தான் நித்யா இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் தரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை அனகாபுத்தூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்பத்திரிக்கு நன்றாக நடந்து வந்து சளி, இருமலுக்கு சிகிச்சை பெறவந்த நித்யாவுக்கு கை நரம்பில் டாக்டர் ஊசி போட்ட பின்புதான் அவர் இறந்தார். எனவே நித்யாவுக்கு தவறான சிகிச்சை அளித்த பெண் டாக்டரை கைது செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதனால் பல்லாவரம்-குன்றத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்து வந்த சங்கர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரக்கத்துல்லா மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள், அருகில் உள்ள பஸ் நிலையத்தில் வந்து அமர்ந்தனர்.

சுமார் 1 மணி நேரம் கழித்து நித்யாவின் உறவினர்கள் மீண்டும் 2-வது முறையாக பல்லாவரம்-குன்றத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர், பல்லாவரம் உதவி கமிஷனர் தேவராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இளம்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு, அதில் ஊசி தவறுதலாக போட்டதால்தான் நித்யா இறந்தார் என தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

அதன்பிறகு சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி சென்ற மாநகர பஸ்கள் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.